
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2020 – 21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதே போல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் வென்ற இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்பதே இங்குள்ள ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாகும்.
ஆனால் தற்போது நியூசிலாந்திடம் சொந்த மண்ணிலேயே இந்தியா 12 வருடங்கள் கழித்து தோற்றது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது. அதே போல ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முகமதது ஷமி காயத்தால் தேர்வு செய்யப்படவில்லை. மிகப்பெரிய அனுபவமிக்க அவர் கடந்த 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதிலிருந்து ஒரு வருடமாகியும் இன்னும் குணமடையாத காரணத்தால் அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஷமி இல்லாதது இந்திய வேகப்பந்து கூட்டணியை பலவீனமாக்கும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதனால் இந்திய அணியை பார்த்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பதற்றமடைந்து பயப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ஷமி ஃபிட்டாக இல்லையெனில் தன்னுடைய சிறந்த செயல்பாடுகளால் பெருமை மிகுந்த வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியில் பிரச்சனை ஏற்படும் என்பது துரதிஷ்டவசமான விஷயமாகும். பும்ராவின் ஃபார்ம் அற்புதமாக இருக்கிறது”
“ஆனால் சிராஜின் ஃபார்ம் சரிந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷமியும் இல்லையென்றால் ஆஸ்திரேலியா கண்டிப்பாக இந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை கண்டு பதற்றமடைய மாட்டார்கள் என்று உறுதியாக சொல்வேன். அதன் காரணமாக பும்ரா பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டிய அதிக அழுத்தத்திற்கு தள்ளப்படுவார்”
இதையும் படிங்க: இந்தியாவின் 2001 வெற்றியால் பயந்தேன்.. ஆனா கடைசியில் சரித்திர வெற்றி பெற்றோம்.. கில்கிறிஸ்ட் பேட்டி
“ஏனெனில் ஷமி, சிராஜ் ஆகிய இருவருமே கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடினர். கடந்த தொடரில் சிராஜ் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். தற்போது பிரசித் கிருஷ்ணா ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா என்பது ஆச்சரியமாகும். யாஷ் தயாள் சமீபத்திய தொடர்களில் தேர்வானார். ஆனால் திடீரென அவர் ஆஸ்திரேலிய தொடரில் இல்லாதது மற்றொரு ஆச்சரியமாகும்” என்று கூறினார்.