
இந்திய அணியின் இளம் இடதுகை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்களுடன் 273 ரன்கள் குவித்து ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் அவரே மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து புஜாரா ஓரங்கட்டப்பட்ட பிறகு மூன்றாவது இடத்தினை அவர் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அந்த இடத்தில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இப்படி திடீரென மூன்றாம் இடத்தில் விளையாடும் வீரரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை அந்த இடத்தில் விளையாட வைப்பதால் சாய் சுதர்சனின் நம்பிக்கை கெட்டுவிடும் என்றும் அவர் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பாங்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி ஒரு இளம்வீரரை வளர்க்க விரும்பினால் அவருக்கு தொடர்ச்சியாக 10 முதல் 15 போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். சாய் சுதர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி ஆட்டத்தில் 87 ரன்கள் எடுத்து அசத்தியபோதும் தற்போது திடீரென தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதால் மனதளவில் அவர் ஒரு ஏமாற்றத்தை சந்திப்பார்.
அதோடு தனக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் இல்லையோ என்ற கேள்வியும் எழத்தோன்றும். சிறப்பாக விளையாட ஆரம்பித்த ஒரு வீரருக்கு நாம் முழு ஆதரவையும் அளிக்க வேண்டும். ஆனால் வார்த்தைகளால் அவரை ஆதரிப்போம் என்று நம்பிக்கை கூறிவிட்டு இப்படி திடீரென ஏமாற்றினால் அவரது மனநிலை மோசமாகிவிடும்.
இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணு விக்கெட் தானா விழும்.. பும்ரா தன்னிடம் கூறிய அட்வைஸ் குறித்து – முகமது சிராஜ் பேச்சு
இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு அரை சதங்களுடன் 30 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் வேளையில் அவரை வளர்க்கவே இந்திய அணியின் நிர்வாகம் விரும்ப வேண்டும். அதனை தவிர்த்து திடீரென ஒரு வீரரை கொண்டு வந்து அவரது இடத்தில் விளையாட வைத்தால் அது அவரது நம்பிக்கையை முற்றிலுமாக குலைக்கும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.