எனக்கு சோகமான நாள்.. திட்டியவங்களை ஏன்னு கேட்க வெச்சதே விராட் கோலியின் ஹால்மார்க்.. சஞ்சய் பங்கர் பேட்டி

Sanjay Bangar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2011இல் அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு அசத்திய அவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக செயல்பட்டு வந்தார்.

இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தடுமாற்றமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமானவர்கள். அதனால் அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனால் அடுத்த இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ அவர்களை கழற்றி விட முடிவெடுத்ததாக தெரிகிறது.

- Advertisement -

சோகமான நாள்:

அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றது தமக்கு சோகமான நாள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். மேலும் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடியதால் எப்போது ஓய்வு பெறுவீர்கள்? என்று பலரும் விராட் கோலியை திட்டியதாக அவர் கூறியுள்ளார்.

அந்த விமர்சகர்கள் தற்போது ஏன் ஓய்வு பெற்றீர்கள்? என்று விராட் கோலியிடம் கேட்பதாகவும் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 10000 ரன்கள் சாதனையைப் பற்றி கவலைப்படாமல் தக்க சமயத்தில் நாட்டுக்காக வருங்காலத்திற்கு வழி விட்டு விடை பெற்றதே விராட் கோலியின் முத்திரை என்றும் சஞ்சய் பங்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிங் கோலியின் முத்திரை:

“தனிப்பட்ட முறையில் அது எனக்கு சோகமான நாள். விராட் கோலி இந்த தலைமுறையின் ராட்சசன். அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கான தகுதியும் திறனும் இருக்கிறது. ஆனால் இதுவே போதும் என்று அவர் தன்னுடைய மனதில் நினைத்து விட்டார். அதற்கான டைமிங்கை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் வந்ததும் ஓய்வு முடிவை அறிவித்த அவர் திரும்ப செல்லப்போவதில்லை”

இதையும் படிங்க: விராட் கோலியின் மாபெரும் சாதனையை இன்று முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் – விவரம் இதோ

“அதை நாம் மதிக்க வேண்டும். நம்முடைய நாட்டில் விராட் கோலியை போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறுவதை பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளார். குறிப்பாக ஏன் ஓய்வு பெற்றீர்கள்? என்று நிறைய மக்கள் கேட்கும் நேரத்தில் விராட் கோலி விடை பெற்றுள்ளார். அதுவே ஒரு மகத்தான விளையாட்டு வீரரின் முத்திரையாகும்” எனக் கூறினார்.

Advertisement