இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். 2020 அண்டர் 19 உலகக் கோப்பையில் 400 ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். பின்னர் ஐபிஎல் தொடரில் 2023 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அவர் அதிவேக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து 625 ரன்கள் விளாசினார்.
அதன் காரணமாக இந்திய அணிக்காக அறிமுகமான அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 712 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதற்கிடையே 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதமடித்த அவர் இந்தியா தங்கப் பதக்கமும் வெல்ல உதவினார்.
நட்சத்திரமாக ஜெய்ஸ்வால்:
அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் குவித்த ஜெயஸ்வால் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் சுனில் கவாஸ்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் ஒரு காலண்டர் வருடத்தில் 1000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் சுனில் கவாஸ்கர் போல மகத்தான வீரராக வருவதற்கான தகுதி ஜெய்ஸ்வாலிடம் உள்ளதாக சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வாலை 2 விஷயங்கள் ஸ்பெஷலாக மாற்றுகிறது. ஒன்று அவருடைய சிறப்பான டெக்னிக். அப்படியானால் அவர் நீண்ட தூரம் விளையாடுவதற்கான சிறந்த அடித்தளத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக தம்முடைய கேரியரின் ஆரம்பத்திலேயே சிறந்த பொறுமையை கொண்டுள்ளார்”
கவாஸ்கர் போல:
“தன்னுடைய சொந்த வாழ்விலும் அவர் நிறைய மேடு பள்ளங்களை பார்த்துள்ளார். கிரிக்கெட் என்பது அவருக்கு அதிகம். தற்போது உள்ள இடத்திற்கு அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். பெரிய ரன்கள் குவிப்பதற்கான பசியை கொண்டிருப்பது தான் அவரை பேட்ஸ்மேனாக தீர்மானிக்கிறது. முந்தைய காலங்களில் இதே போன்ற திறன் கொண்ட ஆட்டக்காரர் யார்? அது சுனில் கவாஸ்கர்”
இதையும் படிங்க: விராட் கோலி எப்போவுமே சச்சின் டெண்டுல்கரை மிஞ்ச முடியாது.. ஏன் தெரியுமா? – சோயிப் அக்தர் கருத்து
“அவரைப் போன்ற ஒருவரை நாம் பார்க்க வெகு தூரம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோற்றது. அதனால் சமனில் இருக்கும் அந்தத் தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



