IPL 2023 : பும்ராவுக்கு மாற்றாக தமிழக வீரரை வாங்கிய மும்பை – ரிஷப் பண்ட்க்கு பதிலாக இளம் வீரரை வாங்கிய டெல்லி

- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக போட்டி போடும் 10 அணிகளில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 6 போட்டிகளில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த அந்த அணி இம்முறை அதிலிருந்து மீண்டெழுந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 6வது கோப்பையை வென்று சாதனை படைக்கப் போராட உள்ளது.

இருப்பினும் அந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் விளையாடாதது ஆரம்பத்திலேயே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஏற்கனவே மிகச் சிறப்பாக செயல்பட்டு தனக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை போட்டியின் அனைத்து தருணங்களிலும் கச்சிதமாக பந்து வீசி குறைவான ரன்களை கொடுத்து முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை மும்பையின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக போற்றப்படுகிறார்.

- Advertisement -

தமிழக வீரர் தேர்வு:
அப்படிப்பட்ட தரமான அவர் கடந்த 2022 ஜூலை மாதம் காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. அந்த நிலையில் 2 முறை குணமடைந்து மீண்டும் காயமடைந்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் பும்ராவுக்கு பதிலாக இந்த சீசனில் விளையாடுவதற்கு தமிழக வீரர் சந்திப் வாரியரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 2021ஆம் ஆண்டு முதலும் கடைசியாக இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவர் இது வரை மொத்தமாக 68 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேரளாவில் பிறந்த அவர் 2012இல் கோவா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் அறிமுகமாகி பின்னர் கேரளா அணிக்காக விளையாடி தற்போது தமிழ்நாடு அணிக்காக சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2019 – 2021 வரையிலான காலகட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 5 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் பும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது. ஏனெனில் பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு சமீப காலங்களாக தொடர்ந்து தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்காக விளையாடும் ஒருவரை மும்பை வாங்கியுள்ளது.

குறிப்பாக அவரை 50 லட்சம் என்ற அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வாங்கியுள்ளது. அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று பார்க்கப்பட்டாலும் ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற தரமான வீரர்களுடன் ஜாம்பவான் பயிற்சியாளர்களைக் கொண்ட மும்பை அணியில் இணைந்து செயல்படுவது அற்புதமான அனுபவத்தை கொடுத்து வருங்காலங்களில் இன்னும் முன்னேறுவதற்கு உதவலாம்.

இதையும் படிங்க: தோனி அடிச்ச பந்தை பிடிக்க நெனைச்சு 2 விரலையே ஒரு பவுலர் ஒடச்சிக்கிட்டாரு – பல ஆண்டு நினைவை பகிர்ந்த உத்தப்பா

அதே போல டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் காயமடைந்த கேப்டன் ரிஷப் பண்ட்க்கு பதிலாக 20 வயது இளம் வீரர் அபிஷேக் போரொல் வாங்கப்பட்டுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாட விட்டாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் 20 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு அவரை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement