டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்தார். அதன் பின் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவரை துவக்க வீரராக களமிறக்கினார்.
அதை பொன்னாக மாற்றிய தவான் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அப்படியே 2015 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து அசத்திய அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்றார். அதே போல 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்தார்.
85 பந்தில் 100:
அந்த வகையில் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அபாரமாக செயல்பட்ட ஷிகர் தவான் உலகிலேயே அதிகபட்சமாக 65.15 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். அதனால் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்களால் பாராட்டப்படும் அவர் தற்போது 38 வயதில் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பலரும் வாழ்த்துக்களை பொழிந்தனர்.
இந்நிலையில் 2013 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் 3 இன்னிங்ஸில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் சந்தீப் பாட்டில் அவரை அதிரடியாக நீக்கி தவானுக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக விளையாடிய தவான் 85 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு 187 ரன்கள் விளாசினார்.
சேவாக்கிற்கு பதிலாக:
அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிவேகமாக சதமடித்த வீரராக தவான் உலக சாதனை படைத்தார். இந்நிலையில் சேவாக்கிற்கு பதிலாக வாய்ப்பு கொடுத்த தம்மை தவான் தலைகுனிய விடவில்லை என சந்தீப் பாட்டில் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் தவான் நல்ல ஃபார்மில் இருந்தார்”
இதையும் படிங்க: ஹெல்மெட்டை பந்து போல தூக்கிப் போட்டு பேட்டால் அடித்து நொறுக்கிய வெ.இ வீரர்.. காரணம் என்ன?
“வீரர்கள் ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் போது நீங்கள் அவர்களை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். இளம் வீரர்கள் நன்றாக விளையாடும் போது தேர்ந்தெடுக்கவில்லையெனில் ஏமாற்றத்தை சந்திப்பார்கள். அதற்கு நிறைய எடுத்துக்காட்டு உள்ளது. அது போல அந்த நேரத்தில் நான் தவானை தேர்ந்தெடுக்க வேண்டிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியிருந்தது. அவர் என்னை தலைகுனிய விடவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.



