
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோலாகலமாக 2 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான 20 வீரர்களை வாங்கி முடித்தது. குறிப்பாக கடந்த சீசன்களில் அசத்திய டேவோன் கான்வே மீண்டும் வாங்கப்பட்டதும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 வருடங்கள் கழித்து வாங்கப்பட்டதும் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
அதே போல இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சாம் கரண் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் வாங்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை அணிக்காக தோனி தலைமையில் அவர் விளையாடினார். அந்த தொடரில் சிஎஸ்கே முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினாலும் அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக அந்த வருடம் அவர் 13 விக்கெட்டுகளை எடுத்து 186 ரன்கள் குவித்தார். மேலும் 2021 சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்வதற்கு அவர் தம்முடைய பங்கையும் ஆற்றினார். அத்துடன் 2021 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் மற்றும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.
ஆனால் 2022 சீசனில் சிறப்பாக விளையாடாததால் அவரை சென்னை கழற்றி விட்டது. பின்னர் 18.50 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக விளையாடிய சாம் கரணை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக பஞ்சாப் அணியும் கடந்த வருடத்துடன் கழற்றி விட்ட நிலையில் தற்போது சென்னை அணி மீண்டும் அவரை 2.40 கோடி என்ற குறைந்த தொகைக்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் அவரை வரவேற்று சிஎஸ்கே தங்களுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நம்முடைய சுட்டி சிங்கம் வளர்ந்து விட்டதை பார்த்து உணர்வுகள் வருகிறது” என்று பதிவிட்டுள்ளது. அதற்கு சாம் கரண் பதில் அளித்துள்ளது பின்வருமாறு. “இது வீட்டுக்கு நான் மீண்டும் வருவதை போன்ற உணர்வை கொடுக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த சிஎஸ்கே அணிக்காக மீண்டும் வருவதற்கு ஆவலுடன் உள்ளேன். போகலாம் வாங்க” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அந்த 2 பந்தையும் ஒரே மாதிரி வீசுறாரு.. கணிக்க முடியாத பும்ரா ஆல் டைம் பெஸ்ட் பவுலராக வருவாரு.. மேக்ஸ்வெல்
2020, 2021 வருடங்களில் விளையாடிய போது சுட்டிக் குழந்தை, கடைக்குட்டி சிங்கம் என்று அவரை சிஎஸ்கே ரசிகர்கள் அழைத்தார்கள். அந்த வகையில் தன் மீது அதிக அன்பு வைத்துள்ள சிஎஸ்கே தமக்கு மிகவும் பிடித்த மகிழ்ச்சியான அணி சாம் கரண் என்று கூறியுள்ளார். அதனால் தன்னுடைய சொந்த அணிக்கு மீண்டும் வருவது போல் உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்