365 நாட்களில் இப்படி ஒரு மாஸ் கம்பேக்க யாருமே பாத்திருக்க முடியாது – ரசிகர்கள் கொண்டாடும் சுட்டிக்குழந்தையின் கதை என்ன

Sam Curran ENGLAND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்றுள்ளது. இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்றாலும் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 137/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கேப்டன் பாபர் அசாம் 32, முகமத் ரிஸ்வான் 15 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 38 (28) ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு முதல் ஓவரிலிருந்தே தரமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 138 ரன்களைத் துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹெல்ஸ் 1, பிலிப் சால்ட் 10, கேப்டன் ஜோஸ் பட்லர் 26, ஹரி ப்ரூக் 20, மொயின் அலி 19 என முக்கிய வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52* (49) ரன்கள் குவித்து 19 ஓவரிலேயே 138/5 ரன்களை எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையையும் சமன் செய்தது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்ததால் ஆட்டநாயகன் விருதை வென்ற சாம் கரண் மொத்தமாக இந்த தொடரில் 13 விக்கெட்டுகளை சாய்த்ததால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் ஃபைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்த அவர் மிகவும் இளம் வயதில் (24) தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் (25) சாதனையையும் தகர்த்தார். ஆனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்து பாதியில் வெளியேறிய அவர் இதே நாளில் அதே துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து விளையாடிய போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டார்.

- Advertisement -

அப்படியே அதிலிருந்து குணமடைவதற்கு 2 – 3 மாதங்கள் எடுத்துக் கொண்ட அவர் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பங்கேற்காமல் உள்ளூரில் நடைபெற்ற டி20 ப்ளாஸ்ட் தொடரில் பங்கேற்று இங்கிலாந்துக்காக விளையாட தயாரானார். அதில் பார்மை மீட்டெடுத்த அவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற 7 போட்டியில் கொண்ட டி20 தொடரில் மீண்டும் விளையாடத் தொடங்கி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அந்த பார்மை அப்படியே இந்த உலகக் கோப்பையிலும் தொடர்ந்த அவர் 365 நாட்கள் கழித்து இன்று ஃபைனலில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்று இங்கிலாந்தின் உலகக்கோப்பை நாயகனாக யாருமே நினைத்து பார்க்க முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க கம் பேக்கை அதுவும் 24 வயதிலேயே கொடுத்துள்ளது உண்மையாகவே அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாகும்.

முன்னதாக என்ன தான் 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமானாலும் 2020, 2021 ஆகிய வருடங்களில் சென்னை அணியில் விளையாடி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை அப்போது முதலே தமிழக ரசிகர்கள் சுட்டிக்குழந்தை என்றழைத்து வருகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக கடந்த வருடம் காயத்தால் வெளியேறிய அவர் தற்போது சாதனை கம்பேக் கொடுத்துள்ளதால் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 2023 தொடருக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எப்படியாவது மீண்டும் வாங்குமாறு சென்னை ரசிகர்கள் அந்த அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Advertisement