
கேரளா கிரிக்கெட் லீக் 2025 டி20 தொடர் அம்மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருக்கும் திறமையான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவனந்தபுரத்தில் 19வது போட்டி நடைபெற்றது. அதில் திருவனந்தபுரம் ராயல்ஸ் மற்றும் கோழிக்கோடு கிளோப்ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருவனந்தபுரம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கோழிக்கோடு அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பிரீத்தீஷ் 7, கேப்டன் குன்னும்மாள் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். மிடில் ஆர்டரில் அகில் 6, சுரேஷ் சச்சின் 8 ரன்களில் அவுட்டான நிலையில் நிதானமாக விளையாடிய மருதுங்கள் அஜினஸ் 51 (50) ரன்கள் எடுத்தார்.
ஆனால் லோயர் ஆர்டரில் களமிறங்கிய சல்மான் நிசர் முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கினார். குறிப்பாக 18 ஓவரின் முடிவில் அவர் 17 (13) ரன்களை எடுத்திருந்த நிலையில் கோழிக்கோடு 115/6 ரன்கள் குவித்திருந்தது. அப்போது பேசில் தம்பி வீசிய 19வது ஓவரில் வெறித்தனமாக விளையாடிய அவர் முதல் 5 பந்துகளிலும் 6, 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 5 சிக்ஸர்களை பறக்க விட்டார்.
கடைசிப் பந்தில் சிங்கிள் எடுத்த அவர் அபிஜித் பிரவீன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அரை சதத்தை தொட்டார். அதனால் பதற்றமடைந்த பவுலர் அடுத்தப் பந்தை ஒயிடாக போட்டு அதற்காக வீசிய மறுப் பந்தில் நோபால் போட்டார். அதில் டபுள் ரன் எடுத்த சல்மான் நிசர் அதற்கடுத்த பந்தில் சிக்சர் பறக்க விட்டார்.
அதோடு நிற்காத அவர் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மொத்தம் 86* (26) ரன்களை 330.77 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக கடைசி 12 பந்துகளில் 11 சிக்ஸர்களை அடித்த சல்மான் கடைசி ஓவரில் மட்டும் 38 ரன்கள் வெளுத்து வாங்கினார். இடது காய் பேட்ஸ்மேனான அவருடைய ஆட்டம் கிட்டத்தட்ட 2014 ஐபிஎல் எலிமினேட்டரில் 87 (25) ரன்கள் அடித்து நொறுக்கிய சுரேஷ் ரெய்னாவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: சேன்ஸ் கிடைக்கலனாலும் இங்கிலாந்தில் நிறைய கத்துக்கிட்டேன்.. அதுவே போதும் – அர்ஷ்தீப் சிங் பேட்டி
திருவனந்தபுரம் அணிக்கு அதிகபட்சமாக ஆசிப் சலாம், நிகில் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய திருவனந்தபுரத்தை 19.3 ஓவரில் 173 ரன்களுக்கு சுருட்டிய கோழிக்கோடு 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக சஞ்சீவ் சதிரசன் 34 ரன்கள் எடுத்த நிலையில் கோழிக்கோடு அணிக்கு அதிகபட்சமாக அகில் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.