
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, விராட் கோஹ்லியின் கேப்டன்சியின்மீது மீண்டும் ஒரு முறை சரமாரியான விமர்ச்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக விராட் கோஹ்லிக்கு ஆதரவாக பேசி வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட், இந்த தோல்விக்கு பிறகு அப்படியே யுடர்ன் அடித்துள்ளார். கோஹ்லியை விட ரோஹித் சர்மாதான் சிறந்த கேப்டானாக இருப்பார் என்று தெரிவித்திருக்கும் அவர், ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்றால் சில தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து தனது யுடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர் கூறியதாவது,
இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாகவே விராட் கோலியை தீப்பொறி என்றும் கேன் வில்லியம்சனை பனிக்கட்டி என்றும் கூறி வந்தனர். ஆனால் ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன்கள் யாரென்று பாருங்கள். இக்கட்டான நேரங்களில் அமைதியாகவும், தனது ஆக்ரோஷத்தை குறைத்துக் கொண்டு சைகைகளை குறைவாகவும் வெளிப்படுத்தியவர்காளத்தான் இருப்பார்கள். ஆனால் கோஹ்லி அப்படி கிடையாது.
அதிகமான ஆக்ரோஷத்தையும் தேவையே இல்லாத சைகைகளையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி, ஆக்ரோஷம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது அவர் சிறப்பான அளவில் செயல்பட விரும்புகிறார் என்பதைப் போலத்தான் தெரிகிறது. ஆனால் அதைவிட ஆட்டத்தின் நுட்பங்களை அறிந்து வைத்து இருக்க வேண்டும். நீங்கள் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம், உங்களால் ஒரு ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல்போனால் காலப்போக்கில் ரசிகர்கள் உங்களை மறந்து விடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் மேலும் பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை விராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா தான் இந்திய அணிக்கான சிறந்த கேப்டானாக இருப்பார். அவருடைய கேப்டன்சியின் தன்மையை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின்போதே நான் தெரிந்து கொண்டேன். கேப்டனுக்கான தகுதிகள் இயற்கையாகவே அமைந்ததைப்போல அந்த தொடரில் இந்திய அணியை அவர் வழிநடத்திச் சென்றார் என்றும் அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர்களில் 5 முறை மும்பை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்திருக்கும் ரோஹித் சர்மா, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி சென்று கோப்பையை கைப்பற்றி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.