இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 38 ரன்னில் வேரிக்கன் வேகத்தில் அவுட்டானார்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வாலுடன் எதிர்புறம் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். மிகவும் நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து அசத்தினார். தொடர்ந்து அசத்திய ஜெய்ஸ்வால் தன்னுடைய 7வது சதத்தை அடித்து வெஸ்ட் இண்டீஸ்க்கு சவாலைக் கொடுத்தார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதத்தை அடித்து அசத்தினார்”
சதத்துக்காக வருத்தப்படல:
தொடர்ந்து அசத்திய அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 87 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலாக மாறிய ஜெய்ஸ்வால் 150 ரன்களை கடந்தார். அவருடன் இணைந்த கேப்டன் கில் 20* ரன்கள் எடுத்ததால் முதல் நாள் முடிவில் இந்தியா 318/2 ரன்களை குவித்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது.
களத்தில் ஜெய்ஸ்வால் 173* ரன்களுடன் இரட்டை சதத்தை நெருங்கும் முனைப்புடன் உள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் தமது முதல் சதத்தை நழுவ விட்டதற்காக வருத்தப்படவில்லை என்று சுதர்சன் தெரிவித்துள்ளார். இது போன்ற சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஜெய்ஸ்வால் ஆட்டம் தமக்கு கற்பித்ததாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கற்பித்த ஜெய்ஸ்வால்:
“என்னுடைய ஆட்டம் நல்ல பங்களிப்பாக இருந்தது. ஜெய்ஸ்வாலுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. நான் ரன்கள் அடிப்பதைப் பற்றி நினைக்காமல் கொஞ்சம் சுதந்திரமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். நான் விஷயங்களை நடக்கச் செய்யாமல் விஷயங்கள் நடப்பதற்காக கொஞ்சம் நேரத்தைக் கொடுக்க முயற்சித்தேன். இன்று கிடைத்த ரன்களுக்காக நன்றியுடையவனாக உள்ளேன். ஆனால் சதத்தை அடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கிறது”
இதையும் படிங்க: டான் பிராட்மேனுக்கு அடுத்து 23 வயதில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
“வருங்காலத்தில் அதை நோக்கியுள்ளேன். ஜெய்ஸ்வால் ஆட்டத்தை எதிர்புறம் பார்த்தது திரில்லாக அமைந்தது. நிறைய சுவாரசியமான ஷாட்டுகளை அடித்த அவர் நல்ல பந்துகளை பௌண்டரிகளாக மாற்றினார். அவர் எம்மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை எனக்குக் கொடுத்தார். எங்களுக்குள் போட்டியில்லை. இருப்பினும் நல்ல பந்துகளை ரன்களாக மாற்றுவதற்கு எம்மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிட்ச் நாளை சுழலுக்கு சாதகமாக மாறலாம். ஏனெனில் நீங்கள் நன்றாக அடித்தாலும் பந்து பறக்கவில்லை” என்று கூறினார்.



