
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது.
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் வேளையில் இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. அதோடு ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரரையும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராக விளையாடப்போகும் அந்த வீரர் யார்? என்பது குறித்த தேடலும் தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக களமிறங்க 23 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சனை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான ரன் குவிப்பை வழங்கி வரும் அவர் உள்ளூர் போட்டிகளிலும் அசத்தி வருகிறார்.
குறிப்பாக ரஞ்சி தொடர், விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி என அனைத்து தொடரிலும் தமிழக அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன் துவக்க வீரராகவும் அற்புதமான புள்ளி விவரங்களை தன் கையில் வைத்துள்ளார். இதன் காரணமாக தொடர்ச்சியாக ரன் குவிக்கும் அவரை ரோஹித் சர்மாவிற்கு பதிலாக டெஸ்ட் அணியின் துவக்க வீரராக கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : மறுபடியும் ஐ.பி.எல் நடந்தாலும் அந்த ஆர்.சி.பி அணி வீரர் விளையாட வரமாட்டாராம் – சிக்கலில் ஆர்.சி.பி அணி
அதோடு ஏற்கனவே சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோருக்கிடையே ஐ.பி.எல் தொடரில் நல்ல பிணைப்பு இருப்பதால் அதனை இந்திய அணியிலும் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.