
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட முதன்மை இந்திய டெஸ்ட் அணியில் தமிழக இடது கை ஆட்டக்காரரான சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் தான் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது இந்த வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்குமே தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது பலரது ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில் எனக்கு இந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்திய அணிக்காக விளையாட இவ்வளவு பெரிய கௌரவம் கிடைக்கும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் எந்த இடத்தில் என்னை ஆட வைத்தாலும் அதில் மகிழ்ச்சி தான்.
இந்திய அணியின் நிர்வாகம் என்னை எந்த ஆர்டரில் களமிறக்க நினைக்கிறதோ, பயிற்சியாளர்கள் என்னை எந்த இடத்தில் விளையாட சொல்கிறார்களோ அந்த இடத்தில் விளையாட நான் தயாராக இருக்கிறேன். தற்போது மனதளவிலும் சரி, திறன் அளவிலும் சரி நான் இங்கிலாந்து தொடரில் விளையாட தயாராக இருக்கிறேன்.
இதையும் படிங்க : விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 5 ஆவது இந்திய கேப்டனாக சுப்மன் கில் நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ
ஏற்கனவே இந்த நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால் நிச்சயம் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக வீரர் சாய் சுதர்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.