
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது மிகப்பெரிய விமர்சனத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவர் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கௌதம் கம்பீர் தாம் விரும்பும் வீரர்களுக்கு போதுமான ஆதரவு கொடுக்கக்கூடிய பயிற்சியாளர் என்று முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தமக்குப் பிடிக்காத வீரர்களை அவர் தூக்கி எறியக்கூடியவர் என்றும் ரமேஷ் கூறியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதே பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் பெரிய சாதனை என்று தெரிவிக்கும் ரமேஷ் அதற்கு முக்கிய காரணமான ஸ்ரேயாஸை நன்றி மறந்து கழற்றி விட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“கௌதம் கம்பீர் தாம் விரும்பக்கூடிய வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பார். ஆனால் தமக்குப் பிடிக்காதவர்களை முற்றிலுமாக விட்டு விடுவார். வெளிநாட்டு மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது விராட் கோலி – ரவி சாஸ்திரி சகாப்தத்தில் துவங்கியது. ஆனால் தற்போது இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தது கௌதம் கம்பீரின் மிகப்பெரிய சாதனையாக காண்பிக்கப்படுகிறது”
“உண்மையில் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதே கம்பீரின் பெரிய சாதனை. அந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் மிகப்பெரிய காரணமாக இருந்தார். ஆனால் அவருக்கு கம்பீர் ஆதரவுளிக்கவில்லை. துருப்பச்சீட்டு வீரரான ஜெயஸ்வால் ஆல் ஃபார்மட்டில் விளையாடக்கூடியவர். அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளது சுமாரான முடிவு”
இதையும் படிங்க: ஜிதேஷ் சர்மாவை ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க இதுவே காரணம் – கேப்டன் சூரியகுமார் பேட்டி
“துபாயில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அங்கே தான் 2025 ஆசிய கோப்பையும் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உச்சகட்ட நம்பிக்கை மற்றும் ஃபார்மில் இருக்கும் அவரை போன்ற வீரருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். மறைந்து போன பின் அல்ல. எனவே இது வானுயர்ந்த தன்னம்பிக்கையைக் கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயரை பயன்படுத்துவதற்கு சரியான நேரம்” என்று கூறினார்.