இங்கிலாந்து மண்ணில் இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் போராடி 310/5 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது. இந்திய அணிக்கு துவக்க வீரர் ராகுல் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். எதிர்ப்புறம் வந்த கருண் நாயர் 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
சச்சின் பாராட்டு:
அடுத்ததாக வந்த கேப்டன் சுப்மன் கில் நங்கூரமாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். இந்தப் பக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 87 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 25, நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய கில் முதல் நாளிலேயே மீண்டும் சதத்தை அடித்து 114* ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் முதல் நாளில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லை ஜாம்பவான் சச்சின் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் முதல் பந்திலிருந்தே நல்லப் போக்கை அமைத்தார். அவர் நேர்மறையாக, பயமின்றி புத்திசாலித்தனமான ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார்”
கிரேம் ஸ்மித் போல:
“சுப்மன் கில் அழுத்தத்தின் கீழ் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் திடமான தடுப்பாட்டத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுடன் விளையாடினார். அந்த இருவரிடமிருந்து க்ளாசிக் ஆட்டம் வந்தது. நன்றாக விளையாடினீர்கள் பையன்களே (பாய்ஸ்)” என்று கூறினார். இளம் வயதில் தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக பொறுப்பேற்ற அசத்திய கிரேம் ஸ்மித் போல சுப்மன் கில் அசத்தத் துவங்கியுள்ளதாக ஜாம்பவான் யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 6, 6, 6, 2, 2, 6.. ஃபெரீரா வெறும் 9 பந்தில் 37.. 5 ஓவர் போட்டியில் மேக்ஸ்வெல் அணியை தெறிக்க விட்ட டிஎஸ்கே
இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. “பொறுப்பு அழைக்கும் போது சிலர் உயர்வார்கள், சிலர் எழுவார்கள். சுப்மன் கில் கேப்டனாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சதங்களை அடித்த அரிதான வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். அமைதியான தலையையும், தைரியமான பேட்டையும் கொண்டுள்ள அவர் பசியுடன் முன்னின்று வழி நடத்துகிறார். அவரைப் பார்த்து கிரேம் ஸ்மித் பெருமையடைவார்” என்று பதிவிட்டுள்ளார்.



