2013இல் என்கிட்ட தொப்பியை வாங்கிய ரோஹித்.. அந்த சாதனையுடன் ரிட்டையானதற்கு வாழ்த்துக்கள்.. சச்சின் பாராட்டு

Sachin Tendulkar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து அசத்தினார். இருப்பினும் அதன் பின் தொடர்ச்சியாக அசத்தத் தவறிய அவர் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடினார். அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதனால் ரோஹித் சர்மா உண்மையான கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதற்காக அசராத ரோஹித் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து மிரட்டினார். அதனால் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்த ரோஹித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளிலும் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

- Advertisement -

ரோஹித் ஓய்வு:

குறிப்பாக 2021 லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த அவர் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக கேப்டனாகவும் முன்னேறிய அவரது தலைமையில் இந்தியா ஓரளவு நல்ல வெற்றிகளைப் பெற்றது. இருப்பினும் கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.

அதற்கு முக்கிய காரணமான ரோஹித் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் தன்னைத்தானே நீக்கிக்கொண்ட முதல் கேப்டனாக மோசமான சாதனைப் படைத்தார். அதே காரணத்தால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால் 67 போட்டிகளில் விளையாடிய கையோடு ரோகித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:

இந்நிலையில் 2013இல் தம்முடைய கையில் சாதாரண வீரராக தொப்பியை வாங்கிய ரோஹித் இன்று இந்திய அணியின் கேப்டனாக முன்னேறி சாதனை படைத்து ஓய்வு பெற்றுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “2013இல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உங்களுக்கு அறிமுக டெஸ்ட் தொப்பியை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது”

இதையும் படிங்க: ப்ரேவிஸிடம் விதிமுறையை மீறிய.. தமிழக வீரர் வருணுக்கு 2 தண்டனை வழங்கிய பிசிசிஐ.. காரணம் என்ன?

“அடுத்தப் போட்டியில் வான்கடே மைதானத்தில் உங்களுடன் பால்கனியில் நின்றதும் நினைவுள்ளது. முதல் நாளிலிருந்தே உங்களுடைய பயணம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அங்கிருந்து இந்திய கிரிக்கெட்டுக்காக ஒரு வீரராக கேப்டனாகவும் நீங்கள் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளைக் கொடுத்துள்ளீர்கள். உங்களது டெஸ்ட் கேரியருக்காக வெல்டன். அடுத்துள்ள விஷயங்களுக்காக வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்கள் உட்பட 4301 ரன்களை அடித்துள்ள ரோஹித் சாம்பியன் பிளேயராக விடை பெற்றுள்ளார்.

Advertisement