
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடி கொடுத்தது. அடுத்ததாக மூன்றாவது போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டிக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ள சச்சின் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். 100 சதங்கள் அடித்த அவர் தன்னுடைய முதல் சதத்தை இங்கிலாந்து மண்ணில் அடித்ததை மறக்க முடியாது. அந்த வகையில் கிரிக்கெட்டின் அடையாளமாக இருக்கும் அவர் பலருடைய ரோல் மாடலாக இருக்கிறார்.
எனவே கிரிக்கெட்டின் தாயகம் மற்றும் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் சச்சினின் உருவப்படம் திறக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. அதை சச்சின் டெண்டுல்கர் அவருடைய மனைவி மற்றும் எம்சிசி தலைவர் மார்க் நிக்கோலஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் சதமடிக்காததை சொல்லி மார்க் நிக்கோலஸ் ஜாலியாக கிண்டல் செய்தார்.
அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த சச்சின் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை கூட சதத்தை அடித்ததில்லை. அதை வைத்து மார்க் நிக்கோலஸ் கிண்டலடிக்கும் வகையில் பேசியது பின்வருமாறு. “லார்ட்ஸ் கௌரவப் பலகையில் உங்களால் வர முடியவில்லை. என்ன நடந்தது? அதற்கு உயர்தரமான இங்கிலாந்து பவுலிங் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது” என்று கூறினார்.
அதை அமைதியாக கேட்ட சச்சின் 1998இல் அடித்த சதத்தை குறிப்பிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தார். 1998ஆம் ஆண்டு எம்சிசி அணியை அதனுடைய சொந்த மைதானமான லார்ட்ஸில் அடித்து நொறுக்கிய சச்சின் 125 (114) ரன்கள் விளாசி கேப்டனாக ரெஸ்ட் ஆஃப் உலக அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் அது அதிகாரப்பூர்வமற்ற போட்டி என்பதால் லார்ட்ஸ் கௌரவ பலகையில் இடம் பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: பும்ரா தான் உலகின் சிறந்த பவுலர்.. அந்த துல்லியமான திறமைக்கு 10க்கு 10 மார்க் தருவேன்.. ஷாஹீன் அப்ரிடி ஓப்பன்டாக்
இருப்பினும் அதை மார்க் நிக்கோலஸ்க்கு பதிலடியாக சச்சின் கொடுத்தது பின்வருமாறு. “1998இல் நினைவுப் போட்டியில் இங்கே விளையாடிய போது நான் சதத்தை அடித்தேன். அதில் கிளன் மெக்ராத், ஆலன் டொனால்ட், ஜகவல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, மெக்மிலன் (ஆகிய பவுலர்களுக்கு எதிராக) இருந்தார்கள். ஆனால் பொதுவாக லார்ட்ஸ் பலவகையில் இல்லையென்று நினைப்பீர்கள். ஏதோ ஒரு வகையில் அது நடக்கக்கூடாது என்றிருந்தாலும் நடந்தது” என்று கூறினார்.