IPL 2023 : என்னால் முடியாததை நீ சாதிச்சுட்ட, பெருமையுடன் அர்ஜுனை பாராட்டிய சச்சின் – ஆச்சர்ய புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்திலேயே முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததாலும் அடுத்த 3 போட்டிகளில் அதிரடியாக செயல்பட்டு ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து வெற்றி பாதையில் நடந்து வருகிறது. அந்த அணியில் ஏற்கனவே காயத்தால் பும்ரா பங்கேற்காத நிலையில் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஜோப்ரா ஆர்ச்சரும் காயத்தால் விலகியதால் ஒரு வழியாக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட்டு வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் மகத்தான சாதனைகளை படைத்த மும்பையின் அடையாளம் சச்சின் டெண்டுல்கரின் மகனான அவர் வேகப்பந்து வீச்சாளராக நாட்டுக்கு விளையாட வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பயிற்சிகளை தொடங்கினார். முதலில் உள்ளூர் அளவில் விளையாடத் துவங்கி பின்னர் கடந்த சில வருடங்களாக மும்பை அணியில் நெட் பவுலராக விளையாடி வந்த அவருக்கு கடந்த வருடம் ஆரம்பத்திலேயே 6 தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோனதால் கடைசி சில சம்பிரதாய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சச்சின் பெருமிதம்:
ஆனாலும் ஜாம்பவானின் மகன் மிக விரைவில் வாய்ப்பு விட்டார் என்ற பேச்சுக்களை தவிர்ப்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அவர் நடைபெற்று முடிந்த ரஞ்சிக் கோப்பை மும்பையிலிருந்து வெளியேறி கோவா அணிக்காக விளையாடி முதல் முறையாக சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அப்படி முன்பை விட நல்ல அனுபவம் கொண்டுள்ள அவர் இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 2.5 ஓவரில் 18 ரன்களை 6.35 என்ற சிறப்பான எக்கனாமியில் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.

குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது ஹைதராபாத்தில் கடைசி விக்கெட்டாக புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்து ஃபினிஷிங் செய்த அவரை கேப்டன் ரோஹித் சர்மா கட்டிப்பிடித்து பாராட்டினார். அதே போல் கடைசி ஓவரில் மிகவும் பரபரப்புடன் பெவிலியனில் அமர்ந்திருந்த சச்சின் டெண்டுல்கர் தனது மகன் முதல் விக்கெட்டை எடுத்த போது மிகவும் உணர்ச்சியடைந்து பெருமிதத்துடன் சிரித்து முகத்துடன் களத்திற்குள் வந்து பாராட்டினார்.

- Advertisement -

மேலும் போட்டியின் முடிவில் அனைத்து மும்பை அணியினரை ட்விட்டரில் பாராட்டிய சச்சின் “ஒரு வழியாக ஐபிஎல் தொடரில் டெண்டுல்கர் ஒரு விக்கெட்டை எடுத்து விட்டார்” என்று தன்னையும் தனது மகனையும் கலகலப்புடன் பாராட்டினார். அதாவது இந்தியாவுக்காக 30000+ ரன்களையும் 100 சதங்களையும் விளாசி பேட்டிங்கில் நிறைய மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள சச்சின் பந்து வீச்சிலும் 201 விக்கெட்களை சாய்த்து நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1993இல் நடைபெற்ற ஹீரோ கோப்பை ஃபைனலில் கடைசி 6 பந்துகளில் 6 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய அசாத்தியமான சூழ்நிலையில் 3 ரன்களை மட்டுமே கொடுத்த சச்சின் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரிலும் 2008 – 2013 வரை அவ்வப்போது பந்து வீசிய அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது தம்முடைய மகன் முதல் விக்கெட்டை எடுத்த காரணத்தாலேயே சச்சின் அப்படி கலகலப்புடன் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:சச்சினை விட கிங் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் – கம்பேர் செய்பவர்களுக்கு விராட் கோலி கொடுத்த பதில் இதோ

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் ரஞ்சிக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கரை டக் அவுட்டாக்கிய (2009இல்) ஒரே பவுலராக புவனேஸ்வர் குமார் சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் நேற்றைய போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் புவனேஸ்வர் குமாரை தான் தன்னுடைய முதல் விக்கெட்டாக எடுத்தார். அதை விட சச்சினை ரஞ்சி கோப்பையில் புவனேஸ்வர் குமார் டக் அவுட்டாக்கிய அதே ஹைதராபாத் மைதானத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் அவரை தன்னுடைய முதல் விக்கெட்டாக எடுத்துள்ளது மற்றொரு ஆச்சரியமாகும்.

Advertisement