இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி போராடி பகிர்ந்து கொண்டது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அற்புதமான வெற்றியைப் பெற்றது. அந்தத் தொடரில் அசத்திய வீரர்களை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வரிசையாக பாராட்டியுள்ளார்.
அந்த வகையில் புதிய பந்தை அடித்து தேய்த்து இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் யசஸ்வி ஜெய்ஸ்வால் பயமின்றி இங்கிலாந்தை பந்தாடியதாக சச்சின் பாராட்டியுள்ளார். குறிப்பாக கடைசிப் போட்டியில் நைட்வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப் மிகச்சிறப்பாக விளையாடி 66 ரன்கள் குவித்தார். அவருக்கு வழிகாட்டிய ஜெய்ஸ்வால் நைட்வாட்ச்மேனுடன் சேர்ந்து அமைத்த 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு விருந்தாக அமைந்ததாகவும் சச்சின் பாராட்டியுள்ளார்.
பயமற்ற ஜெய்ஸ்வால்:
இது பற்றி ரெடிட் இணையத்தில் சச்சின் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் தனது மனநிலைமையால் என்னைக் கவர்ந்தார். அவருடைய பயமற்ற அணுகுமுறை, எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது எதிர்புறம் சென்று விக்கெட்டைபாதுகாத்துக் கொள்ள வேண்டும், எப்போது கவனமாக விளையாட வேண்டும் போன்ற விஷயங்களை தெரிந்து செயல்படுவது சிறப்பானது”
“பொதுவாக நீங்கள் எப்போதும் ஒரே கியரில் விளையாடக்கூடாது. சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் பல்வேறு கியர்களை பயன்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலிருந்து அதையே செய்தார். முதல் போட்டியிலேயே கொஞ்சம் தடுமாறிய அவர் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து சதத்தை அடித்தது என்னைப் பொறுத்த வரை முக்கியமானது. ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே நீங்கள் சதத்தை அடிப்பது மிகவும் முக்கியமானது”
சச்சின் பாராட்டு:
“பந்து வேகமாக நகர்ந்து வந்த கடினமான சூழ்நிலைகளில் அவர் முதல் சதத்தை அடித்தார். அப்படி ஆரம்பத்திலேயே நீங்கள் அடித்தளத்தை அமைப்பது, மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களுடைய ஆட்டத்தை வடிவமைக்க உதவும். அதே விஷயத்தை 2வது போட்டியில் செய்த அவர் 87 ரன்னில் அவுட்டானதற்காக ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பார். அன்று நீண்ட இன்னிங்ஸ் விளையாடிய அவர் கவனச் சிதறலால் விக்கெட்டை இழந்தார்”
இதையும் படிங்க: ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வுசெய்து அறிவித்த – ஸ்டூவர்ட் பிராடு
“இருப்பினும் உங்களால் அனைத்து நேரங்களிலும் அனைத்து ஷாட்டையும் சரியாக விளையாட முடியாது. கடைசிப் போட்டியில் கடினமான பிட்ச்சில் அற்புதமான சதத்தை அடித்த அவர் தன்னுடைய போராட்டக் குணம், முதிர்ச்சித்தன்மை, உறுதித்தன்மை ஆகியவற்றை காண்பித்தார். ஆகாஷ் தீப்பை வழி நடத்திய ஜெய்ஸ்வால் அவர் ரன்கள் அடிப்பதற்கு தேவையான உத்வேகத்தைக் கொடுத்ததைப் பார்த்தது விருதாக அமைந்தது” என்று கூறினார்.



