மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50வது வருட வெள்ளி விழா நேற்று நடைபெற்றது. சுனில் கவாஸ்கர், சச்சின் போன்ற ஜாம்பவான் வீரர்களை உருவாக்கிய அந்த மைதானம் 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றது போன்ற சிறப்புமிக்க போட்டிகளையும் நடத்திய பெருமை கொண்டது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த மைதானத்தின் 50வது வருட விழாவில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, திலிப் வெங்சர்க்கார், டயானா எடுல்ஜி கலந்து கொண்டார்கள். மேலும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே மற்றும் மும்பை வாரியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ரசிகர்களும் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில் தம்முடைய வாழ்நாளின் கடைசி போட்டியை வான்கடே மைதானத்தில் விளையாடியது பற்றி சச்சின் நினைவு கூர்ந்தார்.
மும்பையில் ஃபேர்வெல்:
குறிப்பாக தாம் 24 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியதை தமது அம்மா ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார். அதனாலேயே கடைசி போட்டியை கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தமது அம்மா பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பையில் நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அந்தத் தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பிசிசிஐயை தொடர்பு கொண்ட நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். ஒரு காரணத்திற்காக எனது கடைசி போட்டி மும்பையில் நடைபெற விரும்பினேன். 24 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடிய நான் மொத்தமாக 30 வருடங்கள் கிரிக்கெட்டில் விளையாடினேன். ஆனால் எனது அம்மா என் ஆட்டத்தை பார்த்ததில்லை”
எல்லாம் அம்மாவுக்காக:
“எனது கடைசிப் போட்டியின் சமயத்தில் அம்மாவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் மும்பையை தவிர்த்து வேறு இடத்திற்கு அவரால் பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. அப்போட்டியின் முதல் நாளில் பேட்டிங் செய்ய சென்ற போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ரசிகர்களும் எனக்கு மரியாதையான வரவேற்பு கொடுத்தார்கள்”
இதையும் படிங்க: 140 கோடி ஆசிர்வாதத்துடன் அதை கொண்டு வருவோம்.. சச்சின், கவாஸ்கரிடம் அடக்கத்தை காட்டிய ரோஹித் பேட்டி
“அந்த உணர்ச்சியால் என்னுடைய கண்கள் கலங்கினாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். கடைசி ஓவருக்கு முன்பாக பெரிய திரையை பார்த்த போது அதில் எனது அம்மா தெரிந்தார். அப்போது நாளின் கடைசி 6 பந்துக்கு முன் ஏன் அம்மாவை காண்பித்து என்னை உணர்ச்சிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். அதனால் கேமராமேன், ஒளிபரப்பு குழுவின் டைரக்டர் வெஸ்ட் இண்டீஸ் பாஸ்போர்ட் கொண்டவரா? என்று நான் சந்தேகப்பட்டேன். ஏனெனில் அம்மாவை காண்பித்து என்னுடைய உணர்ச்சிகளுடன் விளையாடிய அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு சாதகமாக நடிப்பது போல் எனக்கு தோன்றியது” என்று கூறினார்.



