சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2024 காலண்டர் வருடத்தில் அசத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த நிகழ்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்ம்ரிதி மந்தனா ஆகியோருக்கும் சிறந்த வீரர், வீராங்கனைகள் விருது வழங்கப்பட்டது.
அந்த நிகழ்வில் ரோகித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் தற்போதைய இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பங்கேற்றார்கள். அந்த விழாவில் சி.கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் ஸ்பெஷல் விருது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி தமக்கு கொடுத்த வழியனுப்பும் நிகழ்வை சச்சின் நினைவு கூர்ந்தார்.
தோனியின் பிளான்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தருணங்களை நினைக்கும் போது எனக்கு வார்த்தைகள் இருக்காது. அது திட்டமிடப்படவில்லை. சொர்க்கத்தில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். அதை திரும்பிப் பார்க்கும் போது அது எனது வாழ்வில் நடந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. அதற்காக எனக்கு நானே அதிர்ஷ்டம் உள்ளவனாக கருதுகிறேன்”
“கடைசி நேரத்தில் மொத்த அணியும் சேர்ந்து எனக்காக ஏதோ திட்டமிட்டார்கள். பின்னர் நாங்கள் அதைக் கொண்டாடினோம். குறிப்பாக “பாஜி நீங்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். நாங்கள் சில திட்டங்கள் வகுக்க உள்ளோம்” என்று எம்.எஸ். தோனி என்னிடம் சொன்னார். பின்னர் இருபுறங்களிலும் நின்று எங்கள் அணியினர் எனக்கு கைதட்டி கௌரவம் கொடுத்தார்கள்”
சச்சின் அறிவுறை:
“அப்போது தான் இனிமேல் இந்திய அணியின் தற்போதைய வீரராக நான் களத்தில் நடந்து வரப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். அது போன்றவற்றை சிலர் மட்டுமே அனுபவித்திருப்பார்கள்” என்று கூறினார். மேலும் தற்போதைய வீரர்களுக்கு அவர் கொடுத்த அறிவுரை பின்வருமாறு. “கிரிக்கெட் இல்லாமல் நாம் அனைவரும் இங்கே உட்கார்ந்து இருக்க மாட்டோம். அதனால் அதுவே என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு”
“உங்களிடமும் இருக்கும் பேட் பந்தை நீங்கள் திடமாக பிடிக்கவில்லையெனில் உங்களுடைய கேரியரில் மெதுவாக இடத்தை விடுவீர்கள். அதற்காக கவனத்துடன் இருங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நமது வாழ்வில் சில கவன சிதறல்கள் இருக்கும். ஆனால் அது உங்களுடைய கேரியரை பாதிக்க விடாதீர்கள். அது நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொறுத்தது”
இதையும் படிங்க: 140 கோடியில் யாருமில்லை.. வலியை சொல்லாத பாண்டியா இந்தியாவுக்காக சோகத்துடன் அசத்துறாரு.. கைப் நெகிழ்ச்சி
“நம்மிடம் அனைத்தும் இருக்கும் போது அதை நாம் எப்படி எடுத்துக்கொண்டு நாட்டின் பெயருக்காக விளையாடுகிறோம் என்பது முக்கியம். தற்போது விளையாடும் உங்கள் அனைவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கிரிக்கெட்டை விளையாட நிறுத்தி விட்டால் அது சில வருடங்களுக்கு முன்பே நின்றது போல் தெரியும்” எனக் கூறினார்.



