எப்போதும் என்னுடைய ரோல் மாடல் அவர்தான், அவரைப்போல் விளையாட முயற்சித்தும் முடியல – எம்எஸ் தோனி ஓப்பன்டாக்

- Advertisement -

இந்திய முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ராஞ்சியில் பிறந்து இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் லட்சியத்துடன் ரயில்வே வேலையையும் புறக்கணித்து விட்டு 2004இல் சௌரவ் கங்குலியின் மாணவராக அறிமுகமானார். முதல் போட்டியிலேயே டக் அவுட்டானாலும் நாட்கள் செல்லச் செல்ல அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்தை பிடிப்பதுடன் அதிரடியாகவும் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கினார். அதை விட 2007இல் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்ற அவர் 2010இல் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.

அத்துடன் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களின் தாகத்தை தணித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்று தன்னை மிகச் சிறந்த கேப்டனாக நிரூபித்தார். மேலும் இன்றைய அணியில் விளையாடும் 70% வீரர்களுக்கு அன்றே வாய்ப்பளித்து வளர்த்து வருங்காலத்தை வளமாக கட்டமைத்து ஜாம்பவானாக ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 4 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளையும் வென்றுள்ளார்.

- Advertisement -

தோனியின் ரோல் மாடல்:
அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் தோனி மிகப்பெரிய ரோல் மாடலாக திகழ்கிறார். சொல்லப்போனால் கிரிக்கெட் தவிர்த்து இதர துறைகளிலும் இந்தியாவில் இருக்கும் நிறைய பேர் அவரை தங்களது ரோல் மாடலாக பின்பற்றுகிறார்கள். அப்படி கோடிக்கணக்கானவர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தாலும் தம்முடைய ரோல் மாடல் எப்போதுமே சச்சின் டெண்டுல்கர் என்று தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

என்னதான் 1983 உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான அணி வென்றது முதல் இந்தியாவில் கிரிக்கெட் ஆழமாக வேரூன்றினாலும் 1989இல் 16 வயது பிஞ்சுக் கால்களுடன் அறிமுகமாகி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் அனைத்து இடங்களிலும் ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சச்சின் டெண்டுல்கர் இந்திய பேட்டிங் துறையை 24 வருடங்கள் தோள் மீது சுமந்தார் என்றே கூறலாம்.

- Advertisement -

அதிலும் 90களில் அவர் அடித்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையில் அவர் அவுட்டானதும் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளமாக இருந்தது. அப்படி இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலப்படுத்திய சச்சின் டெண்டுல்கரை பார்த்து இந்தியாவில் அனைத்து சிறுவர்களும் தெருக்களில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார்கள். அந்த வகையில் அவரை ரோல் மாடலாக கொண்டு தாமும் அவரைப் போலவே விளையாட முயற்சித்ததாக தோனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஆனால் கடைசி வரை அவரைப் போல் தம்மால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ள அவர் எப்போதும் தனது இதயத்தில் சச்சின் டெண்டுல்கர் தான் தங்களுடைய ரோல் மாடல் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி ஓசூரில் எம்எஸ் தோனி குளோபல் பயிற்சி பள்ளியை திறந்து வைத்த பின் குழந்தைகள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு. “நான் உங்களது வயதில் சிறுவனாக வளர்ந்த போது எப்போதும் சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதை பார்ப்பேன். அதனால் அவரைப் போலவே விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் என்னால் அவரைப் போல் விளையாட முடியவில்லை. எனது மனதிற்குள் எப்போதும் அவரைப் போல் விளையாட வேண்டும் என்று நினைக்கும் எனக்கு வளரும் போது அவர் தான் கிரிக்கெட் ரோல் மாடல் ஆவார்” என்று கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ள அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் தமக்கு மிகவும் பிடித்த பாடம் “விளையாட்டு” என்றும் தோனி பதிலளித்தார். முன்னதாக முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் ட்ராவிட் ஆகியோரது தலைமையில் விளையாடினாலும் தாம் விளையாடியதிலேயே எம்எஸ் தோனி தான் சிறந்த கேப்டன் என்று ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement