உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதன்பின் அடுத்த ஒரு வருடத்துக்குள் தனது அபார திறமையால் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த வரலாற்றின் முதல் ஐசிசி டி20 உலக கோப்பையை யாருமே எதிர்பாராத வண்ணம் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மற்றும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியின் மிஸ்பா-உல்-ஹக் கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்தது என அந்த உலகக் கோப்பையில் அவர் இந்தியாவின் சரித்திர வெற்றியில் மிக மிக முக்கிய பங்காற்றினார்.
சாதனைகளும் – சர்ச்சைகளும்:
அதன்பின் 2007இல் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த அணிக்கு எதிராக வெற்றி பெற்ற ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது. அந்தப் போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஸ்ரீசாந்த ஆட்டநாயகன் விருது வென்று மீண்டும் ஒரு சரித்திர வெற்றியில் தனது பெயரை பொறித்தார்.
அதன் காரணமாக 3 வகையான இந்திய அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று சாதித்த எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியிலும் முக்கிய இடம் வகித்தார். ஒரு கட்டத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாகத் தொடங்கிய அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்ட புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இருப்பினும் அதை எதிர்த்துப் போராடிய அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றியும் கண்டார்.
ஒதுக்கிய பிசிசிஐ:
தன் மீது எந்தவித குற்றமும் இல்லை என நிரூபித்த அவர் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் கேரள அணிக்காக தீவிரமாக விளையாடி வந்தார். அந்த நிலையில் 39 வயதை தொட்டுள்ள அவர் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விடுவதற்காக தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் வரும் காலங்களில் வெளிநாட்டு டி20 தொடர்களில் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளதாக கூறியுள்ள அவர் தொடர்ந்து சினிமா துறையில் தீவிரமாக நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்னதான் சர்ச்சையில் சிக்கினாலும் இந்தியாவின் பல்வேறு சரித்திர வெற்றிகளில் பங்காற்றிய அவரின் ஓய்வுக்கு யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது மனதார வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் இந்தியா வென்ற 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் இடம் வகித்தார் என்ற சிறு நன்றி உணர்வு கூட இல்லாத பிசிசிஐ தற்போது ஓய்வு பெற்றுள்ள அவருக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சிறிய பாராட்டு கூட தெரிவிக்காமல் ஒதுக்கியுள்ளது.
சச்சினிடம் கிடைத்த அங்கீகாரம்:
இந்நிலையில் பிசிசிஐ ஒதுக்கினாலும் இந்திய கிரிக்கெட்டுக்காக மிகச் சிறப்பாக பங்காற்றி விடை பெற்றுள்ள ஸ்ரீசாந்த்தை இந்தியா கண்ட மகத்தான கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “எப்போதுமே உங்களை நிறைய நுணுக்கங்களை தெரிந்த ஒரு திறமைவாய்ந்த பந்துவீச்சாளராக மதிப்பிட்டு வருகிறேன். இந்தியாவிற்காக கடந்த பல வருடங்களாக பங்காற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீசாந்த். உங்களின் 2-வது இன்னிங்ஸ்காக எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் என்று கூறலாம். ஏனெனில் என்னதான் சூதாட்ட சர்ச்சையில் சிக்கனாலும் ஒரு காலத்தில் இந்தியாவின் வெற்றிக்காக ஸ்ரீசாந்த் உண்மையாக வியர்வை சிந்தி பாடுபட்டவர் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட அவரின் திறமையை உணர்ந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீசாந்த்க்கு இப்போது தான் உண்மையான அங்கீகாரம் கிடைத்துள்ளது என சமூக வலைதளங்களில் கூறுகிறார்கள்.



