இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010 – 2022 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி இந்திய அணியின் வெற்றிகளில் தம்மால் முடிந்த பங்காற்றினார். குறிப்பாக 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது பெற்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
அதே போல 2015 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்த அவர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது பெற்றார். மேலும் ஐசிசி ஒருநாள் தொடர்களில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட தவான் சாதனை படைத்துள்ளார். அதனால் அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்று பாராட்டுவது வழக்கமாகும்.
சச்சின் வாழ்த்து:
இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறிய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்ற ஷிகர் தவானுக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து பின்வருமாறு.
“ஷிகர் தவான் உங்களுடைய அட்டகாசமான ஆட்டத்தை மைதானம் தவற விடும். உங்களின் புன்னகை, நடை மற்றும் விளையாட்டின் மீதான அன்பு ஆகியவை எப்போதும் ஈர்ப்பாகவே உள்ளது. உங்கள் கேரியரின் பக்கத்தை நீங்கள் திருப்பும் போது பாரம்பரிய ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். அடுத்ததாக வரும் எல்லாவற்றிலும் சிறந்ததை செய்ய வாழ்த்துகிறேன். சிரித்துக்கொண்டே இரு, தவான்” என்று பதிவிட்டுள்ளார்.
மறக்க முடியாது:
அதே போல தாம் பயிற்சியாளராக செயல்பட்ட காலகட்டங்களில் ஷிகர் தவான் மறக்க முடியாத ஆட்டங்களை வெளிப்படுத்தியதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். மேலும் பயிற்சியாளர், வர்ணனையாளர் போன்ற பல்வேறு வழிகளில் தவான் கிரிக்கெட்டில் பங்காற்ற இன்னும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: இந்த பணத்தை அவங்களுக்கு நன்கொடையாக தரேன்.. பாகிஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் ரஹீம் பேட்டி
“உங்களுடைய ஓய்வை என்ஜாய் செய்யுங்கள் ஷிக்கி பாய். பயிற்சியாளர் மற்றும் இயக்குனராக நான் இருந்த 7 வருட கால கட்டங்களில் நீங்கள் நிறைய மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கை கொண்டு வந்தீர்கள். ஆசிய, ஐசிசி தொடர்கள் மற்றும் கால்லேவில் (இலங்கை) விளையாடிய உங்களுடைய மேக்ஸ் வின்னிங் இன்னிங்ஸ் எப்போதும் நினைவில் இருக்கும். இப்போதும் இளமையுடன் இருக்கும் நீங்கள் விளையாட்டில் பங்காற்ற நிறைய வழிகள் உள்ளது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.



