
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அனுபவ வீரர்கள் அற்ற இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப் போகிறது? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.
ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா, மற்றும் அனுபவ விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள வேளையில் தற்போது முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வரிசை எவ்வாறு அமையும் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தோளில் தாங்கி வந்த விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால் அவரின் இடத்தில் இறங்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தேடல் அதிகரித்துள்ளது. அதோடு கோலியின் இடத்தில் இறங்கும் வீரர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சபா கரீம் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் இடத்தில் விளையாட எந்த வீரர் தகுதியானவர்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி இல்லாத வேளையில் இந்திய அணியில் கே.எல் ராகுலின் பங்கு மகத்தானது. ஏனெனில் நான் கே.எல் ராகுலை நான்காவது இடத்தில் களமிறங்கி நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் ஒரு பேட்ஸ்மேனாக பார்க்கிறேன்.
பலரும் அவரை வெவ்வேறு இடத்தில் பயன்படுத்த கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை விராட் கோலியின் அனுபவத்திற்கு பிறகு தற்போதுள்ள இந்திய அணியில் கே.எல் ராகுல் அனுபவமிக்க வீரராக உள்ளதால் அவரை நான்காவது இடத்தில் கொண்டு வருவேன். அதுதான் சிறந்த தேர்வாகவும் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை நான்காவது இடத்தில் களமிறங்கி கே.எல் ராகுல் பின்னடைவை சந்தித்தால் அதன்பிறகு அவரது பேட்டிங் வரிசையை மாற்றலாம்.
இதையும் படிங்க : பட்டோடியின் மரியாதையை மீட்டு வாங்கிய சச்சின்.. பிசிசிஐயிடம் பெருந்தன்மையை உச்சத்தை காட்டிய தகவல்
ஆனால் கே.எல் ராகுலிடம் இருக்கும் பேட்டிங் டெக்னிக் இங்கிலாந்தில் நிச்சயம் சிறப்பாக செயல்பட உதவும். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் நிறைய முதிர்ச்சி அடைந்துள்ளதாக நினைக்கிறேன். அதனால் அவருடைய பொறுப்பும் கூடியிருக்கிறது என சபா கரீம் கூறியது குறிப்பிடத்தக்கது.