ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் அனைத்து சீனியர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடியது.
அதில் முதல் போட்டியிலேயே 116 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தாலும் அதற்கெல்லாம் அசராத இந்தியா அங்கிருந்து அபாரமாக விளையாடி அடுத்த 4 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது. அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்திய அணி தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
ரெடியா இருக்காங்க:
முன்னதாக அந்தத் தொடரின் 4வது போட்டியில் 153 ரன்கள் இலக்கை துரத்திய ஜெயஸ்வால் அதிரடியாக 93* ரன்களும் சுப்மன் கில் 58* ரன்களும் விளாசி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். கடந்த சில வருடங்களாகவே கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தலாக செயல்படும் அவர்கள் ஏற்கனவே தங்களை இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட கில் ஆகியோர் டி20 அணியில் ரோஹித், விராட் கோலியின் இடத்தை நிரப்ப தயாராக உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வாளர் சபா கரீம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் இந்தியா தற்போது விளையாடும் அதிரடியான கிரிக்கெட்டை இந்த அணியும் முன்னோக்கி எடுத்து வந்துள்ளது”
“இது இந்திய அணிக்கும் தேர்வாளர்களுக்கும் சிறப்பான செய்தி. முதல் போட்டியில் தோற்றாலும் இந்தியா அங்கிருந்து வலுவான கம்பேக் கொடுத்தது. ஜெய்ஸ்வால் – கில் ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் பார்ட்னர்ஷிப் அமைத்ததையும் அவர்கள் இடது – வலது கை ஜோடியாக இருப்பதையும் நாம் அடிக்கடி பேசி வருகிறோம். உங்கள் முன்னே தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளது”
இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிரான இந்த தொடரில் நாங்கள் மோசமான தோல்வியை சந்திக்க காரணம் இதுதான் – சிக்கந்தர் ராசா வருத்தம்
“ரோஹித், விராட் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை. எனவே இந்த வீரர்களும் அந்த இடத்திற்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன். அதே போல இன்னும் சில வீரர்களும் தயாராக உள்ளனர். எனவே அவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது தேர்வாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இளம் வீரர்கள் சீனியர் அணியை போலவே அதிரடியாக பேட்டிங் செய்து தொடரை வென்று காட்டியுள்ளனர்” என்று கூறினார்.



