ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறப்போகும் இந்த ஆசிய கோப்பையில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களும் சீனியர் வீரர்களும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் முகமது சமி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்படாதது நிறைய முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

அதைவிட சமீப காலங்களில் காயத்தால் விலகியிருந்த நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் அதிலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியதால் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019க்குப்பின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட அசத்தலாக செயல்பட்டு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கணிசமான கேப்டன்ஷிப் அனுபவங்களை பெற்றுள்ள இவரை 35 வயதை கடந்த ரோகித் சர்மாவுக்கு பின் அடுத்த தலைமுறை கேப்டனாக வளர்க்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது.
கேப்டன் பாண்டியா:
அதனாலேயே கடந்த ஜனவரியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயமடைந்த போது கேப்டனாக செயல்பட்ட இவர் தற்போது மீண்டும் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார். இருப்பினும் அவரது கேப்டன்சிப் புள்ளிவிவரங்களை புரட்டினால் பஞ்சாப்பை ஒருமுறைகூட பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லாத அவர் இந்த வருடம் லக்னோவை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற போதிலும் எலிமினேட்டரில் தோற்றது. அதேபோல் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அவரது தலைமையில் 4 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத நிலையில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு ஐபிஎல் 2022 கோப்பையை முதல் வருடத்திலேயே வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா அதன்பின் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியாவுக்கும் கோப்பை வென்று கொடுத்தார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி போட்டியில் கேப்டன்ஷிப் செய்த அவரது தலைமையில் இதுவரை இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்றது கிடையாது. அதன் காரணமாக ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சரியான முடிவல்ல:
இந்நிலையில் இதற்கு முன் இந்தியாவை வழி நடத்தியுள்ளார் என்ற காரணத்துக்காக கேஎல் ராகுலை துணை கேப்டனாக தேர்வுக்குழு நியமித்துள்ளது சரியான முடிவல்ல என்று முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ஏனெனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் கூட்டணி அதிரடியாக பாதையில் விளையாட முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கு கேஎல் ராகுல் கேப்டன்ஷிப் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை செட்டாகாது ஆனால் பாண்டியாவின் கேப்டன்ஷிப் பொருந்தும் என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஹர்திக் பாண்டியா அந்த இடத்திற்கு வலுவானவர். ஆனால் தேர்வுக்குழு துணை கேப்டன் பதவி பற்றி பெரிய அளவில் சிந்திக்காமல் தேர்வு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு முன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் காயமடைந்த போது கேப்டன்ஷிப் செய்தார் என்பதற்காக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் தேர்வுக்குழு சற்று ஆழமாக சிந்தித்திருந்தால் ஹர்திக் பாண்டியா போன்ற வித்தியாசமான மனப்பான்மை கொண்டவரை தேர்வு செய்திருப்பார்கள்”
“ஏனெனில் அணியில் உள்ள வீரர்களிடம் அவர் வித்தியாசமான மனநிலையைக் கொண்டு வருவார். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் புதிதாக கொண்டுவர முயற்சிக்கும் அதிரடி பாதையில் இந்திய அணியை வழிநடத்த அவர் தான் சரியான நபர். நானாக இருந்தால் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்திருப்பேன். ஏனெனில் ஐபிஎல் தொடரில் தனது அணியை தனது வித்தியாசமான அதிரடியான அணுகுமுறையால் அவர் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது”

“இந்த பொறுப்பை அவரிடம் கொடுத்திருந்தால் அவரின் தலைமைத்துவ திறமைக்கும் நல்லதாக இருக்கும். எனவே தேர்வுக்குழு ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்வதற்கு இதுவே சரியான தருணம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக அபாரமாக செயல்படுகிறார்” என்று கூறினார்.



