இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ளது. அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் 5 சதங்கள் அடித்தும் சிறப்பாக ஃபினிஷிங் செய்யாதது முக்கிய காரணமானது. அதே போல ஃபீல்டிங் துறையில் 7 கேட்ச்கள் தவற விட்டது இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தது.
குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக விளையாடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 4 கேட்ச்கள் தவற விட்டது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்தது. அதனால் அடுத்தப் போட்டிகளில் அவரை ஸ்லிப் பகுதியில் நிற்க விடாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஜெயஸ்வால் ஸ்லிப், ஃகல்லி பகுதியில் நிற்க மாட்டார் என்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் அறிவித்துள்ளார்.
ஸ்லிப் ஃபீல்டிங்:
முதல் போட்டியில் கையில் லேசான காயத்தை சந்தித்த ஜெய்ஸ்வால் கேட்ச்கள் தவற விட்டதால் சோகத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனாலேயே அவரை இரண்டாவது போட்டிக்கான ஃபீல்டிங் பயிற்சியில் ஸ்லிப் பகுதியில் நிற்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது போட்டியில் ஜெய்ஸ்வால் ஷார்ட் லெக், சில்லி பாய்ண்ட் இடங்களில் நின்று ஸ்பின்னர்களுக்கு உதவி செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ரியான் டென் டஸ்சேட் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எப்போதும் கேட்ச் பிடிக்கும் துறையில் ஆழத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். ஜெய்ஸ்வால் எங்களுடைய சிறந்த கேட்ச்சராக இருந்து வருகிறார். நாங்கள் அவருடைய தன்னம்பிக்கையை நிர்வகிக்க விரும்புகிறோம். 2 ஸ்பின்னர்கள் விளையாடும் போது ஷார்ட் லெக் பகுதி முக்கியமானது என்று நாங்கள் விவாதித்தோம்”
புதிய இடம் தேர்வு:
“அந்தப் பகுதியில் நாங்கள் நிறைய ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்படுவதை விரும்புகிறோம். இங்கிலாந்தில் எப்போதும் போட்டியின் ஏதேனும் ஒரு சமயத்தில் உங்களுக்கு 4 ஸ்லிப் கேட்ச்சர்கள் தேவைப்படுவார்கள். அங்கே தற்காலிகமாக ஜெய்ஸ்வாலுக்கு நாங்கள் ஸ்லிப், ஃகல்லி பகுதியிலிருந்து தற்காலிகமாக இடைவெளி கொடுக்கிறோம்”
இதையும் படிங்க: 6 ஓவர் போட 6 மாசம் ஆச்சு.. முடியலயான்னு ரோஹித் பாய் கேட்பாரு.. 3 வருட கம்பேக் வலி பற்றி குல்தீப் பேட்டி
“அவருடைய கைகளும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. எனவே அவருடைய தன்னம்பிக்கையை மீட்டுக் கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் இரண்டாவது போட்டித் துவங்குகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



