இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மெகா தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அந்தத் தொடரின் 4வது போட்டி மான்செஸ்டரில் துவங்குகிறது. முன்னதாக 3வது போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 9 – 10 ஓவர்களைப் போட்டு இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார்.
அதைப் பார்த்த பலரும் ஜஸ்ப்ரித் பும்ரா எப்போதுமே இந்தியாவுக்காக நீண்ட நேரம் பவுலிங் செய்வதில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். மேலும் பென் ஸ்டோக்ஸ் போல ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
கம்பேர் பண்ணாதீங்க:
ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுவதுடன் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார். எனவே வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்ட அவரை பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமையுடன் ஒப்பிடுவது சரியற்றது இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் பதிலடி கொடுத்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் போல நீண்ட நேரம் பவுலிங் செய்ய சிராஜ் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி டஸ்சேட் பேசியது பின்வருமாறு. “கடைசி நாளில் பென் முழுமூச்சுடன் வந்து நிறைய ஓவர்கள் வீசியது சூப்பரானது. மேலும் அவர் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் துறையிலும் அசத்தினார். அதற்காக நாங்கள் எங்களுடைய பவுலர்களை எதிரணியில் உள்ள வீரர்களுடன் ஒப்பிட முடியாது. எங்களுக்கு சொந்தமாக பலம் இருக்கிறது. ஜஸ்ப்ரித் பும்ரா குறைந்த ஓவர்களை வீசினாலும் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும்”
சிராஜ் சிங்கம்:
“தேவைப்படும் சூழ்நிலையில் சிராஜ் நீண்ட நேரம் பவுலிங் செய்வார். தொடர்ச்சியான 7, 8, 9வது ஓவரை வீசும் போது கூட அவரிடம் நீங்கள் சிறந்த செயல்பாட்டை பார்க்க முடியும். அதற்காக அனைவரும் அதை செய்வார்கள் என்று அர்த்தமல்ல. ஜஸ்ப்ரித் பும்ராவை எப்படி சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நாங்கள் அவரிடமே பேசியுள்ளோ. அதே போல சிராஜ் பணிச்சுமையை நிர்வகிப்பதும் முக்கியம்”
இதையும் படிங்க: கருண் நாயரின் மறுவாய்ப்பு முடிந்ததா? 4வது போட்டியில் சுதர்சன் விளையாடுவாரா? கோச் ரியான் பதில்
“பென் ஸ்டோக்ஸ் போல தேவைப்பட்டால் இந்தியாவுக்காக சிராஜ் எக்ஸ்ட்ரா ஓவரை வீசத் தயாராக இருக்கிறார். அவரைப் போன்றவரை நாங்கள் கொண்டுள்ளதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தெரிவிக்க வேண்டும். தமது கையில் பந்தை வைத்திருக்கும் போது அவர் இதயத்திலிருந்து சிங்கத்தைப் போல வீசுவார். அதனால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நீங்கள் உணர்வீர்கள்” என கூறினார்.



