சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. 2014க்குப்பின் முதல் முறையாக இம்முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்முறை உலகக் கோப்பை நடைபெறுவதால் அதில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி முழுமையாக தயாராகி புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இந்த தொடரில் கடந்த காலங்களில் இந்தியாவின் வெற்றிகளில் ஆற்றிய பங்கிற்காக சிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியானது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெறாத நிறைய இளம் வீரர்களுக்கும் அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டுள்ள தேர்வு குழுவினர் கேரியர் முடிந்ததாக கருதப்படும் ஷிகர் தவானை கண்டுகொள்ளாமல் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் இந்த ஆசிய விளையாட்டு டி20 போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்துவார் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இளம் அணி:
மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அறிமுகமாகி 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று கோப்பையை வெல்ல உதவினார். அதனால் இந்தியாவுக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி அனைத்து வீரர்களை போலவே ஆரம்பத்தில் தடுமாறிய அவர் 2022 சீசனில் சுமாராக செயல்பட்டாலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் மீண்டும் பெரிய ரன்களை குவித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதை விட உள்ளூர் தொடர்களில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட அவர் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்து சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இத்தொடரில் இந்தியாவை வழி நடத்தும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார். அவரது தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
குறிப்பாக கொல்கத்தா அணியில் இந்த வருட ஐபிஎல் சீசனில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் மிகச் சிறந்த மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது. அதன் காரணமாக தேர்வாகியுள்ள அவருடன் பஞ்சாப் அணியில் அசத்திய ப்ரப்சிமரன் சிங் விக்கெட் கீப்பராக முதல் முறையாக தேர்வாகியுள்ளார்.
மேலும் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுடன் சென்னை அணியில் மிரட்டிய சிவம் துபே 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்த அணியில் தமிழகத்திலிருந்து சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தேர்வாகியுள்ளார். இருப்பினும் ஐபிஎல் 2023 ஐபிஎல் ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னைக்கு எதிராக அபாரமாக விளையாடி டிஎன்பிஎல் 2023 தொடரிலும் அசத்திய இளம் வீரர் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரும் இத்தொடருக்கான அணியில் ஸ்டேண்ட் பை வீரர்களாக தேர்வாகி இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை நெருங்கியுள்ளனர்.
இந்த தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 தொடருக்கான இந்திய அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், அர்ஷிதீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், சிவம் மாவி, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்)
ஸ்டாண்ட் பை வீரர்கள்: யாஷ் தாகூர், சாய் கிஷோர் வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்



