
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டி நல்ல ஒரு ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டியின் 19 ஆவது ஓவர் வரை நாங்கள் போட்டியில் இருந்ததாக உணர்கிறோம்.
இந்த மைதானம் 40 ஓவர்கள் வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இரு அணிகளுக்குமே சரிசமமான விதத்தில் போட்டியை அளித்தது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் வரை அடித்தது சரியான இலக்காக தான் இருந்தது. ஆனாலும் இரண்டாவதாக அவர்கள் பேட்டிங் செய்கையில் சில விடயங்களை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : தல தோனி மற்றும் ரெய்னாவுக்கு அடுத்து 3 ஆவது சி.எஸ்.கே வீரராக ருதுராஜ் கெய்க்வாட் – நிகழ்த்திய சாதனை
இந்த போட்டியில் நாங்கள் கேட்ச் வாய்ப்புகளை சரியாக எடுத்திருந்தால் நிச்சயம் போட்டியின் சூழல் மாறியிருக்கலாம். ஆனால் நாங்கள் செய்த ஒரு சில தவறுகள் அவர்களுக்கு சாதகமாக முடிந்தன. அதன் காரணமாகவே இந்த போட்டியில் நாங்கள் தோல்வியையும் சந்திக்க நேர்ந்தது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.