மார்ட்டின் கப்டில் தனித்துவ சாதனையை தகர்த்த ருதுராஜ்.. ஆஸிக்கு எதிராக புதிய உலக சாதனை

Ruturaj gaikwad 223
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனால் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மறக்க முடியாத தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சிறிய ஆறுதல் வெற்றியை அதுவும் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களின் உதவியுடன் இந்தியா பதிவு செய்தது.

இத்தொடரில் அசத்திய ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு மத்தியில் துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக கௌகாத்தியில் நடைபெற்ற 3வது 123* ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

ஆஸிக்கு எதிராக சாதனை:
அந்த வகையில் இத்தொடரில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக அவர் 223 ரன்கள் 55.75 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்காக மார்ட்டின் கப்தில் 218 ரன்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 231, இங்கிலாந்துக்கு எதிராக
2. கேஎல் ராகுல் : 224, நியூசிலாந்துக்கு எதிராக
3. ருதுராஜ் கைக்வாட் : 223, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

- Advertisement -

அப்படி வருங்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ருதுராஜ் செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இனிமே இடமில்லை.. அவரது இடத்தை பிடித்த இளம்வீரர் – விவரம் இதோ

மேலும் உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள அனுபவத்தை கொண்டுள்ள அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை வழி நடத்தி தங்க பதக்கம் வெல்வதற்கு உதவினார். அதனால் வரும் காலங்களில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் வருவதற்கு வாய்ப்புள்ளது என சில முன்னாள் வீரர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement