சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் நிரந்தர வாய்ப்பின்றி தடுமாறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட ஒரே இடத்திற்கு பல்வேறு மேட்ச் வின்னர்கள் இருப்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ருதுராஜ் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அவருக்கு முதன்மை அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே இருந்து வருகிறது.
இங்கிலாந்தில் விளையாட புதிய முடிவை எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் :
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்துள்ளார். ஆனாலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இங்கிலாந்து சென்றும் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் நாடு திரும்பும் ஏமாற்றமான விடயத்தை சந்திக்க இருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதை தொடர்ந்து இங்கிலாந்தில் விளையாடுவதற்காக மிக முக்கியமான ஒரு முடிவை ருதுராஜ் கையிலெடுத்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் கவுண்ட்டி சாம்பியன்ஷிப் தொடருக்காக முதல்முறை அவர் யார்க்ஷையர் அணியுடன் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஏற்கனவே யார்க்ஷையர் அணிக்காக சச்சின், யுவராஜ் சிங், புஜாரா ஆகியோர் விளையாடியிருந்த வேளையில் தற்போது நான்காவது இந்திய வீரராக அவர் அந்த அணிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். எதிர்வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் சீசனில் மொத்தம் அவர் 5 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்திற்காக போராடி வரும் அவர் இந்த கவுண்டி தொடரில் அசத்தினால் மீண்டும் தரமான கம்பேக் கொடுக்க முடியும் என்பதாலே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வாய்ப்பு குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் : எதிர்வரும் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நான் பங்கேற்பதற்கு இங்குள்ள சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமே காரணம்.
இதையும் படிங்க : அந்த பலவீனத்தில் முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயரை.. ஏன் இங்கிலாந்து தொடரில் விட்டீங்க? கங்குலி அதிருப்தி
யார்க்ஷையர் அணிக்காக எனது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்காக பங்களிக்க காத்திருக்கிறேன். இங்கு எனக்கு கிடைக்கும் வாய்ப்பில் என்னுடைய திறமையை நிரூபித்தால் நிச்சயம் என்னுடைய திறனையும் அதிகரிக்க முடியும் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



