தோனியின் வளர்ப்பான அவர் இந்திய அணியின் வருங்கால கேப்டனா வருவாரு பாருங்க – இளம் வீரரை இப்போதே பாராட்டும் கிரண் மோர்

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மழையின் உதவியுடன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த போட்டியில் இளம் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 24 ரன்களும் ருதுராஜ் கைக்வாட் 19* ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள். அதில் ஜெய்ஸ்வால் தற்போது ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற துவங்கியுள்ள நிலையில் ருதுராஜ் கைக்வாட் ஒரு வழியாக நீண்ட காலம் கழித்து வாய்ப்பு பெற்றுள்ளார்.

Ruturaj Gaikwad Jaiswal

- Advertisement -

மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் கடைசி கட்ட போட்டிகளில் வாய்ப்பை பெற்று அதிரடியாக விளையாடி ஹாட்ரிக் வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். அதைத் தொடர்ந்து 2021 சீசனில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

வருங்கால கேப்டன்:
அதில் ஆரம்பத்தில் தடுமாறும் பெரும்பாலான வீரர்களை போலவே சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரிலும் எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த வருடம் மீண்டும் 590 ரன்கள் அடித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் விஜய் ஹசாரே கோப்பை, ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களிலும் சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார்.

Utkarsha-Pawar-and-Ruturaj

அதன் காரணமாக தற்போது மீண்டும் இந்திய அணியில் வாய்ப்புகளை பெற துவங்கியுள்ள அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் அளவுக்கு நல்ல திறமையை கொண்ட ருதுராஜ் வருங்காலத்தில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்துவார் என்று நம்புவதாக முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார். மேலும் எம்எஸ் தோனி தலைமையில் ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல அனுபவத்தை கொண்டுள்ள ருதுராஜ் விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ருதுராஜ் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்காக நான் காத்திருக்கிறேன். கைக்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே நல்ல திறமையை கொண்ட வீரர்கள். அதில் ருதுராஜ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் தன்மையைக் கொண்டவர். ஏனெனில் அவருடைய அடிப்படை டெக்னிக் மிகவும் சரியாக இருக்கிறது. அத்துடன் அவர் வருங்காலங்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் அளவுக்கு சிறந்த பொறுமையான குணத்தை கொண்டுள்ளார்”

Kiran-More

“குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியுள்ள அவர் அணியை எவ்வாறு கட்டுப்படுத்துவது கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது போன்ற கேப்டன்ஷிப் அம்சங்களை நிச்சயமாக கற்றிருப்பார். எனவே நல்ல தரமான வீரரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியை கடந்த சில வருடங்களாக கேப்டனாக வழி நடத்தி வரும் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 4 வருடங்கள் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க:ரொம்ப நம்பாதீங்க, 2023 உ.கோ – ஆசிய கோப்பையில் திலக் வர்மா சொதப்ப வாய்ப்பிருக்கு – வாயை விட்ட முன்னாள் பாக் வீரர்

அதன் காரணமாக தோனிக்கு பின் ருதுராஜ் சென்னை அணியின் வருங்கால கேப்டனாக வரவேண்டும் என அந்த அணி ரசிகர்கள் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால் இளமையும் திறமையும் கொண்டுள்ள காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருதுராஜ் கைக்வாட் இளம் இந்திய அணியின் கேப்டனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே தற்போதுள்ள சீனியர்கள் ஓய்வு பெற்ற பின் வருங்காலங்களில் அவரை முழுநேர கேப்டனாக பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement