
தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக டேன் பாட்டர்சன் 5, கோர்பின் போஸ்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 301 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 89, கோர்பின் போஸ்க் 81* ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக குர்ராம் ஷசாத் 3, நாசிம் ஷா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் முடிந்தளவுக்கு போராடியும் 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வெறும் 148 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டீ ஜோர்சி 2, ரிக்கள்டன் 0, ட்ரிஸ்ஷன் ஸ்டப்ஸ் 1, டேவிட் பேடிங்கம் 14, கெயில் வேரின் 2 ரன்களில் பாகிஸ்தானின் தரமான பந்தியில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல நிதானமாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 37, கேப்டன் பவுமாவை 40 ரன்களில் அவுட்டானதால் 99-8 என தென்னாப்பிரிக்கா சரிவை சந்தித்தது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த மார்க்கோ யான்சன் நிதானமாக 16*, ரபாடா அதிரடியாக 31* (26) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்கள்.
அதனால் 150-8 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றி பெற்று 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. அத்துடன் 66.67% புள்ளிகளை பெற்ற தென்னாபிரிக்கா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. 2021, 2023 வருடங்களில் தகுதி பெறாமல் வெளியேறிய அந்த அணி தற்போது முதல் முறையாக ஃபைனலுக்கு சென்று சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: 110 வருடங்கள்.. அதிவேக 200.. ஷமி, அனில் கும்ப்ளேவை முந்தைய ஜஸ்பிரித் பும்ரா.. 3 வரலாற்று சாதனை
அதன் காரணமாக 58.89% புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா 2இல் 1 வெற்றி, 1 ட்ரா பெற்றால் அடுத்து நடைபெறும் தொடரில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது அப்பாஸ் 6 விக்கெட்டுகள் எடுத்தும் இப்போட்டியில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.