
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் அதிரடியாக விளையாடி 330/8 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக மேத்தியூ பிரீட்ஸ்க் 85, ஸ்டப்ஸ் 58, தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஐடன் மார்க்ரம் 49, ரியன் ரிக்கல்டன் 35, கோர்பின் போஸ்க் 32* ரன்கள் எடுத்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 4, அடில் ரஷீத் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜேமி ஸ்மித் முதல் பந்திலேயே நன்ரே பர்கர் வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார். மறுபுறம் தடுமாறிய பென் டக்கெட் 14 (33) ரன்னில் மகாராஜ் சுழலில் கிளீன் போல்டானார். அப்போது ஜோ ரூட் – ஜேக்கப் பெத்தல் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள்.
பொறுப்புடன் விளையாடி சரிவை சரி செய்த அந்த ஜோடியில் மிகவும் அதிரடியாக விளையாடிய பெத்தல் 58 (40) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்த சில ஓவரில் நங்கூரமாக விளையாடி வந்த ஜோ ரூட் 61 (72) ரன்னில் மகராஜ் சுழலில் ஸ்டம்பிங்கானார். லோயர் ஆர்டரில் கேப்டன் ஹாரி ப்ரூக் நன்றாக துவங்கிய போதிலும் 33 (40) ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 61 (51) ரன்னில் முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார். டெத் ஓவர்களில் அதிரடி காட்ட முயற்சித்த வில் ஜேக்ஸ் 39 (33) ரன்னில் அவுட்டானதால் இங்கிலாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய இங்கிலாந்துக்கு முத்துசாமி வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ஆர்ச்சர் கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்ட போது ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அதனால் ஆர்ச்சர் 27* (14) ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 325/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 0* (4) என்ற கணக்கில் தொடரை ஆரம்பத்திலேயே வென்றது. இதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 463 ரன்ஸ்.. 5 முறை 50ஸ்.. ஓயாமல் சொல்லி அடிக்கும்.. 26 இளம் தெ.ஆ வீரர் இரட்டை உலக சாதனை
கடைசியாக ஹன்ஸ் க்ரோஞ்சி தலைமையில் 1998ஆம் ஆண்டு இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்திருந்தது. இம்முறை அந்த அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். மறுபுறம் 2017க்குப்பின் 8வது வருடமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் வெல்ல முடியாமல் இங்கிலாந்து தோற்றுள்ளது.