13 வருடம் கழித்து இந்த இடத்திற்கு வந்துள்ள ராஜஸ்தான் ! வார்னே ஆசியுடன் மீண்டும் அதே 2008 மேஜிக் நிகழுமா?

Shane Warne RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கிய 10 அணிகளில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே லீக் சுற்றில் தேவையான வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதில் குவாலிபயர் 1 போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றது. அதேபோல் 3-வது இடத்தைப் பிடித்த லக்னோவை எலிமினேட்டர் போட்டியில் சாய்த்த பெங்களூரு குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் பைனலில் விளையாடப் போகும் 2-வது அணியை தீர்மானிக்கும் முக்கியமான குவாலிபயர் 2 போட்டி மே 27இல் நடைபெற்றது.

Rajat Patidar 58

- Advertisement -

அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அந்த அணியின் சிறப்பான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு விராட் கோலி 7 (8) கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 25 (27) கிளன் மேக்ஸ்வெல் 24 (13) தினேஷ் கார்த்திக் 6 (7) என முக்கிய நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக எலிமினேட்டர் போட்டியில் சதமடித்து காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக 58 (24)ரன்கள் எடுத்தார்.

பைனலில் ராஜஸ்தான்:
அந்த அளவுக்கு பந்துவீச்சில் மிரட்டிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பிரஸித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் – பட்லர் ஓபனிங் ஜோடி 5.1 ஓவரில் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. இதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்தூத் படிக்கல் 9 (12) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

Jos Buttler vs RCB

ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக கடைசி வரை அவுட்டாகாமல் பெங்களூரு பவுலர்களை அதிரடி சரவெடியாக எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 161/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் மே 29இல் நடைபெறும் ஐபிஎல் 2022 மாபெரும் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற அந்த அணி குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை பரிசளித்த குஜராத்தை பழிதீர்த்து கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

14 வருடங்கள் கழித்து:
ஐபிஎல் தொடங்கப்பட்ட கடந்த 2008இல் மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி, டெல்லிக்கு சேவாக் என நட்சத்திரங்களை அந்த அணி நிர்வாகங்கள் கேப்டனாக களமிறக்கின. ஆனால் ராஜஸ்தானில் பெரிய நட்சத்திரம் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவை பெரிய தொகை கொடுத்து வாங்கிய அந்த அணி நிர்வாகம் ஒரு பவுலராக இருந்தாலும் தங்களது கேப்டனாக நியமித்தது.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

அந்த சீசனில் கிரேம் ஸ்மித், ஷேன் வாட்சன் போன்ற ஒருசில நட்சத்திர வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு ரவீந்திர ஜடேஜா, யூசுஃப் பதான் போன்ற நிறைய அனுபவம் இல்லாத இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்திய ஷேன் வார்னே லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு பிளே-ஆப் சுற்றிலும் அசத்தி இறுதிப்போட்டிக்கு ராஜஸ்தானை அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அந்த வருடம் அதேபோல் எம்எஸ் தோனி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு வந்த சென்னையை தோற்கடித்த ராஜஸ்தான் வரலாற்றின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனால் அதன்பின் எத்தனையோ கேப்டன்கள், எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடிய போதிலும் கடந்த 13 வருடங்களாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கு கூட தடுமாறிய அந்த அணி ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஆனால் இம்முறை சஞ்சு சாம்சன் தலைமையில் அசத்தி வரும் ராஜஸ்தான் 13 வருடங்கள் கழித்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

வார்னேவின் ஆசி:
கடைசியாக அந்த அணி பைனலில் விளையாடி கோப்பையை முத்தமிட்டபோது கேப்டனாக இருந்த ஜாம்பவான் ஷேன் வார்னே தற்போது இந்த உலகிலேயே இல்லை என்பது வேதனையான விஷயமாகும். கடந்த பிப்ரவரியில் 50 வயதிலேயே மாரடைப்பால் காலமான அவருக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடரின்போது 2 முறை அஞ்சலி செலுத்தி கௌரவப்படுத்தியது.

- Advertisement -

தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி அவரை பெருமை படுத்தும் அளவுக்கு பேட்டிங் – பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லக்கூடிய அணியாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : கெட்டப், கேப்டன் மாற்றியும் கேரக்டர் மாறாத ஆர்சிபி ! மீண்டும் வெளியேறிய பரிதாபம் – 2022இன் சொதப்பல்கள் இதோ

எனவே மே 29இல் நடைபெறும் இறுதிப்போட்டியில் அவரின் தலைமையில் 2008இல் செயல்பட்டதை போல அபாரமாக செயல்பட்டு 2-வது கோப்பையை ராஜஸ்தான் வென்று அவருக்கு அஞ்சலியாக கோப்பையை பரிசளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நிச்சயம் அவரின் ஆசீர்வாதமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement