நடராஜனின் கதையை பார்த்தாலே நமக்கு இது புரிய வரும் – தமிழக யார்க்கர் கிங்கை பாராட்டிய ஆர்.பி.சிங்

Rp-Singh

கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர் நடராஜன் அந்த தொடரில் தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் வலை பயிற்சி பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு நேரடியாக அவர் துபாயில் இருந்து நேரடியாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணித்தார்.

Nattu-2

அதன் பிறகு டி20 போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சைனிக்கு ஏற்பட்ட காயம் என அணிக்குள் வாய்ப்பு பெற்ற நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக டெஸ்ட் தொடருக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் அவர் அங்கேயே தங்கியுள்ளார். அவரது வலைப்பயிற்சி பந்துவீச்சினை கூட இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் காயமடைந்து வெளியேறி இருப்பதால் அவர்களுக்கு பதிலாக நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்ந்துள்ளார். மேலும் வருகிற 7ஆம் தேதி துவங்க உள்ள மூன்றாவது டெஸ்டில் அவர் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது இந்த வருகை குறித்து பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Nattu

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் நடராஜனை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நடராஜரின் கதையை எழுதுவது யார் ? அவரது கதையை விட ஒரு சிறப்பான நம்பிக்கை கொடுக்கும் கதையை என்னால் நினைவு கூற இயலவில்லை. வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இணைந்த அவர் வெள்ளை நிறப்பந்தில் சிறப்பான பந்து வீச்சாளராக உருவானார்.

- Advertisement -

இப்போது சிகப்பு நிற பந்து வீச்சிலும் விளையாட உள்ளார். அவரது அசத்தலான ஐபிஎல் பார்ம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடரட்டும், இது நல்லதொரு தொடக்கம் என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்று தொடரில் சமநிலையில் உள்ள நிலையில் நடராஜனின் வருகை இந்திய அணிக்கும் பலமாக அமையும் என பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.