இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இருபெரும் ஜாம்பவான்கள் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்ததோடு டெஸ்ட் அணிக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் மேட்ச் வின்னர்களாக விளையாடி வந்தனர்.
இந்திய அணியின் மேட்ச் வின்னர் இவர்தான் : முன்னாள் இங்கி வீரர் கருத்து
இப்படி இவர்கள் இருவரும் திடீரென ஓய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து வெளியேறிய வேளையில் இங்கிலாந்து தொடருக்கான புதிய கேப்டனாக இளம் வீரரான சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது எவ்வாறு இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளப்போகிறது? என்கிற கேள்வி இருந்தது.
அப்படி ஒரு நிலையில் அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வெளிப்படுத்திய இந்த செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அணியின் கேப்டன் சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 700 ரன்களுக்கு மேல் அடித்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். வெளிநாட்டு மண்ணில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் முதல் தொடரிலேயே வெளிப்படுத்திய பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றதோடு அடுத்த நட்சத்திர வீரராகவும் அவரை மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில்லை காட்டிலும் ரிஷப் பண்ட் தான் உண்மையான மேட்ச் வின்னர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ரொனால்டு பட்சர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாதது நிச்சயம் பெரிய இழப்புதான்.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக மேட்ச் வின்னர்களாக இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் இல்லாத இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினம். அந்த அளவிற்கு அவர்களது அனுபவம் இந்திய அணிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் இளம் வீரர்கள் அவர்களது இடத்தை மெல்ல மெல்ல நிரப்புவார்கள் என்று நினைக்கிறேன். தற்போதைய இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில்லை காட்டிலும் ரிஷப் பண்ட் தான் டெஸ்ட் மேட்ச் வின்னர் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் கே.எல் ராகுல் மற்றும் முகமது சிராஜ்.. உறுதியான அறிவிப்பு – விவரம் இதோ
ஏனெனில் இந்தியாவை தாண்டி எந்த வெளிநாடுகளில் போட்டி நடைபெற்றாலும் அங்கு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியையே திருப்பும் திறன் கொண்டவராக ரிஷப் பண்ட் இருக்கிறார். எனவே அவரை டெஸ்ட் மேட்ச் வின்னராக தான் கருதுவதாக ரொனால்டு பட்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.



