இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசனானது இன்று இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் கோலாலமாக தொடங்கியது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரானது அடுத்த மாதம் வரை நடைபெற இருக்கின்றன. இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வருவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் போட்டியிலேயே அசத்திய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி :
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும், விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் இன்று விளையாடியிருந்தனர். அந்த வகையில் இன்று விளையாடிய அவர்கள் இருவருமே சதம் அடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக இந்த தொடரில் அவர்கள் இருவரும் சதம் அடித்துள்ளதால் நிச்சயம் எதிர்வரும் நியூசிலாந்து தொடரிலும் ஜோடியாக அசத்துவார்கள் என்ற நம்பிக்கை பலரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா 61 பந்தில் சதம் அடித்தது மட்டுமின்றி 155 ரன்கள் எடுத்து பிரமாதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 131 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான அவர்கள் இருவரையும் நிர்வாகம் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட நிர்பந்தம் செய்து வந்த வேளையில் இன்றைய போட்டியில் அவர்கள் அடித்த சதத்தின் மூலம் அவர்களது பார்ம் இன்னும் மிகச் சிறப்பாக இருப்பதை இந்த ஆட்டம் காண்பித்துள்ளது.
இதையும் படிங்க : 12 வருட கம்பேக்கில் 16000.. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்த கிங் கோலி.. புதிய உலக சாதனை
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



