நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்க இதுதான் காரணம் – கேப்டன் ரோஹித் சர்மா

Rohith Pant
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா 2வது போட்டியில் நேற்று வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

pollard 1

- Advertisement -

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட்க்கு பதில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். இந்திய அணியில் இஷான் கிசான் நீக்கப்பட்டு கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டார். இதையடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஒபெனராக ரிஷப் பண்ட்:
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை தொடக்க வீரராக தம்முடன் களமிறங்குமாறு கேப்டன் ரோகித் சர்மா அழைத்தார். இது அனைவரையும் பெரிய ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில் இந்தியாவிற்காக இதுவரை 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் ஒரு முறை கூட ஓபனராக களமிறங்கியதே கிடையாது. ஐபிஎல் தொடரிலும் கூட அவர் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் தான் விளையாடி வந்தார்.

rishabh-pant

இதை அடுத்து முதல்முறையாக களமிறங்கிய ரோஹித் சர்மா – ரிஷப் பண்ட் ஜோடியில் ரோகித் சர்மா வெறும் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்த சில ஓவர்களிலேயே முதல் முறையாக ஓபனிங் வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் 18 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலியும் 18 ரன்களில் அவுட் ஆனதால் இந்தியா மோசமான தொடக்கத்தை பெற்றது. இதனால் 43/3 என சரிந்த இந்தியாவை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் கேஎல் ராகுல் மீட்க முயன்றார்கள்.

- Advertisement -

238 ரன்கள் இலக்கு:
4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடியில் 49 ரன்களில் அவுட்டான ராகுல் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் அவுட்டானார். இறுதியில் தீபக் ஹூடா 29 ரன்களும் வாசிங்டன் சுந்தர் 24 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 237/9 ரன்களை போராடி எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய அல்சாரி ஜோசப் மற்றும் ஓடென் ஸ்மித் தலா 2 விக்கெட்களை எடுத்தார்.

இதை தொடர்ந்து 238 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்கள் தங்களது அபாரமான பந்து வீச்சால் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இதன் காரணமாக சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 193 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தியா சார்பில் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த வெற்றிக்கு வித்திட்ட இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 44 ரன்களும் அகில் ஹொசைன் 34 ரன்களும் எடுத்தனர்.

Rohith

நிரந்தரமல்ல:
இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறக்கியது தற்காலிகமான முடிவு என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “வித்தியாசமான செயல்களைச் செய்ய என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, எனவே இது வித்யாசமான முடிவாகும். ரிஷப் பண்டை ஓப்பனிங்கில் பார்த்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனாலும் இது நிரந்தரமான முடிவல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவான் அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருக்கு தேவையான நேரம் தேவை. ஒருசில வித்தியாசமான முடிவுகளை எடுக்கும் போது ஒரு சில தோல்விகளை அடைந்தால் அது பற்றி கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அணிக்கு நீண்டகால தீர்வை லட்சியமாக பார்ப்பதே முக்கியமாகும். எனவே அதற்கு தேவையான செயல்களை தற்போதே செய்து எது நல்ல பலனை அளிக்கிறது என சோதித்து பார்க்க உள்ளோம்” என கூறியுள்ளார்.

அவர் கூறுவது போல முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் வீரர்களாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கைக்வாட், மாயங்க் அகர்வால் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டதால் இந்திய அணிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் 2வது போட்டியில் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதால் வேறு வழியின்றி இஷான் கிசான் நீக்கப்பட்டார். அதன் காரணமாகவே ரிஷப் பண்ட் ஓப்பனிங்கில் சோதனை முயற்சியாக களமிறக்கப்பட்டார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வருடம் நடைபெற உள்ள 2023 உலகக்கோப்பைக்கு முன்பாக இதுபோன்ற பல சோதனைகளை செய்து அதில் எது நல்ல பலனளிக்கிறதோ அதை உலக கோப்பை இந்திய அணியில் செயல்படுத்த உள்ளதாக ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement