இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வைக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி ஜனவரி 7 ஆம் தேதி அன்று சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு பெருகியுள்ளது.
மேலும் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெறாத ரோகித் சர்மா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சையை முடித்துக்கொண்டு டெஸ்ட் போட்டிக்கான தகுதித் தேர்விலும் வெற்றி அடைந்து ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய திரும்பிய அவர் 14 நாட்கள் குவாரண்டைன் நாட்களை கடந்து தற்போது நேற்று இரவு இந்திய அணியுடன் இணைந்தார்.
அதுமட்டுமின்றி இன்றைய பயிற்சியில் இணைந்த ரோகித் சர்மா தீவிரமாக பேட்டிங் பயிற்சி மற்றும் பீல்டிங் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு உள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா மூன்றாவது போட்டியில் விளையாடுவது முற்றிலும் உறுதியாகியுள்ளது.
The engine is just getting started and here is a quick glimpse of what lies ahead. #TeamIndia #AUSvIND pic.twitter.com/3UdwpQO7KY
— BCCI (@BCCI) December 31, 2020
மேலும் இந்திய அணியில் ரோகித்தின் வருகை தற்போது பேட்டிங் ஆர்டருக்கு பலம் சேர்த்துள்ளது. ரோஹித்தின் வருகையால் 2 வீரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அது இந்திய அணிக்கு பலனையே தரும் என்பதால் நிச்சயம் ரோகித் களமிறங்குவார். அதுமட்டுமின்றி இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய உமேஷ் யாதவும் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அறிமுக வாய்ப்பைப் பெறுவார் என்றும் பரவலாக கூறப்படுகிறது.
அதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்பதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் டெஸ்ட் போட்டியில் இழந்த தனது இடத்தை மீட்பார் என்றே தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் துவக்க வீரராக சொதப்பிய அகர்வால் வெளியேற்றப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று ஒரு கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.