ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இடம்பெறாத ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக இந்தியா திரும்பி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை முறையாக முடித்து தற்போது பிட்னஸ் டெஸ்டிலும் தேர்வு பெற்று ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். ரோஹித் சர்மாவின் விடயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த விடயம் ஒரு தீர்வாக அமைந்தது.
மேலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடாத அவர் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிளையும் கொரோனா குவாரன்டைன் விதிமுறைகளினால் தவறவிட்டார். இதனால் ரோகித் சர்மா 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படியே ஆஸ்திரேலியா திரும்பிய ரோகித் சர்மா 14 நாட்கள் குவாரன்டைன் இருந்து தற்போது இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ரோஹித் சர்மாவின் வருகை இந்திய அணிக்கு பெரிய பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த இரண்டு போட்டிகள் ஆகவே துவக்க வீரர்களில் ஒருவர் சொதப்பி வருவதால் நிச்சயம் ரோகித் சர்மா அந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடங்கி முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அணியுடன் இணைவதால் இந்த ஆண்டு நிச்சயம் அவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது விராட் கோலி அணியில் இல்லாததால் ரஹானே கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ரோஹித்தின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ரோகித் சர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா விளையாடுவது உறுதியாகியுள்ளது மட்டுமின்றி அவருக்கு இந்த பொறுப்பை வழங்கியது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட் துணை கேப்டன் பதவியை பெற்றிருக்கிறார்.
இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள ரோஹித் 2141 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும், 10 அரை சதங்களையும் அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்கத்தில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோகித் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து துவக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.