ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. அதேபோன்று அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரை இந்திய அணி (0-2) என்ற கணக்கில் இழந்து இலங்கை அணியிடம் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை பறிகொடுத்து மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இப்படி தோற்க கம்பீர் எடுத்த சில முடிவுகளே காரணம் என்று தெரிகிறது.
அதோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவுகளுக்கு மாறாக கம்பீர் சோதனை செய்கிறேன் என்கிற பெயரில் செய்த மாற்றங்கள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் கேப்டன் ரோஹித் பயிற்சியாளரான கம்பீர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் இலங்கை அணிக்கெதிரான இந்த தொடரில் வலது கை – இடது கை வீரர்கள் பேட்டிங் வரிசை, அக்சர் படேலை முன்கூட்டியே களமிறக்கியது, முழுநேர பந்துவீச்சாளர்களை குறைத்து அதிக ஆல்ரவுண்டர்களை விளையாட வைத்தது என பல்வேறு முடிவுகளை ரோஹித்திடம் கேட்காமலே கம்பீர் சோதித்து பார்த்ததாக தெரிகிறது.
எப்போதுமே கேப்டனாக சுதந்திரமாக தனக்கு தேவையான முடிவுகளை எடுக்கும் ரோஹித் சர்மாவை இந்த தொடரில் அவர் இஷ்டப்படி அணியை தேர்ந்தெடுக்க விடாமல் கம்பீர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ரோஹித் சர்மா அணித்தேர்வில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தோல்விக்கு ஐபிஎல் தான் காரணமா? இனிமேல் அதை செஞ்சு தான் ஆகணும்.. இந்திய பேட்ஸ்மேன்களை எச்சரித்த ரோஹித்
தன்னுடைய பயிற்சியின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கம்பீர் நினைப்பது சரி தான் என்றாலும் தற்போதைய அணி எவ்வாறு இருக்கவேண்டும் என்பது கேப்டன் எடுக்க வேண்டிய முடிவு தான் என்பதால் அவர் இஷ்டத்துக்கு கம்பீர் ஒத்துழைக்க வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



