
இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்குகிறது.
எனவே டி20 தொடரிலேயே திண்டாடிய இலங்கையை ஒருநாள் தொடரிலும் வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த கேப்டன் ரோஹித் சர்மா இத்தொடரில் முதல் முறையாக கௌதம் கம்பீருடன் இணைந்து செயல்பட உள்ளார். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி முடிந்து போன கதை என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ரோஹித் அட்வைஸ்:
எனவே தற்சமயத்தில் தடுமாறும் இலங்கைக்கு எதிராக நடைபெறும் இந்த தொடரை பயிற்சி செய்யும் இடமாக நினைக்காமல் பொறுப்புடன் விளையாடுமாறு இந்திய வீரர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேவையானவற்றை இங்கிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தேன்”
“உலகக் கோப்பையை வென்று வீட்டுக்கு வந்த போது டெல்லி மற்றும் மும்பையில் சந்தித்த அனுபவங்கள் சிறந்த உணர்வை கொடுத்தது. ஆனால் தற்போது நாங்கள் அதிலிருந்து நகர வேண்டும். கடந்த காலத்தில் நாங்கள் செய்தது நன்றாக இருந்தது. ஆனால் காலம் நகர்வதால் நாங்களும் நகர வேண்டும். 2023 உலகக் கோப்பையில் அதுவே நடந்தது. அதில் தோல்வியை பெற்று ஏமாற்றத்தை சந்தித்த நாங்கள் விரைவாக இந்த உலகக் கோப்பைக்கு நகர்ந்தோம்”
“தற்போது டி20 உலகக் கோப்பை முடிந்துள்ளது. எனவே அடுத்த பெரிய தொடருக்கு நாங்கள் முன்னோக்கி நகர வேண்டும். இந்தத் தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் இடமா என்று கேட்டீர்கள். உண்மையில் இது பயிற்சி செய்யும் இடமில்லை. இது சர்வதேச போட்டி என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த தொடரிலும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி எதையாவது பெற வேண்டும்”
இதையும் படிங்க: தல ஃபார் ரீசன்னா என்னனு எனக்கே தெரியாது.. அவசியமில்லாதப்போ செய்றாங்க.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி
“கண்டிப்பாக நாட்டுக்காக விளையாடும் போது தரம் அப்படியே இருக்கும். நாங்கள் சாத்தியமான அனைத்தையும் முயற்சிப்போம். அப்படித் தான் நாங்கள் கடந்த சில வருடங்களாக விளையாடி வருகிறோம். எனவே இந்தத் தொடரை ஒரு தயாராகும் இடமாக கருதி கொழும்புவில் ஜாலியாக இருக்கலாம் என்று அர்த்தமில்லை. நாங்கள் அப்படி நினைப்பதும் கிடையாது” என்று கூறினார்.