ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தன்னுடைய 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179/2 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே 9 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் களமிறங்கிய சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 95 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டர் 2 சிக்ஸருடன் அரை சதமடித்து 62* (44) ரன்கள் விளாசினார். மறுபுறம் அவரைவிட அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் விளாசி பினிஷிங் கொடுத்தார்.
வரலாற்று சாதனை:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணியினர் உலகத்தரம் வாய்ந்த இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்ட முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்டுகளையும் இழந்தனர். குறிப்பாக மேக்ஸ ஓ’தாவூத் 16, விக்ரம்ஜித் சிங் 1, டீ லீடி 16, அக்கர்மென் 17, கேப்டன் எட்வர்ட்ஸ் உட்பட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20 (15) ரன்கள் எடுத்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆல் அவுட்டை தவிர்க்க முடிந்த அந்த அணி 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அந்தளவுக்கு அசத்தலாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற 2 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 51* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
மறுபுறம் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் போட்டி உட்பட சமீப காலங்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் பொறுப்புடன் செயல்பட்டு 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (39) ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். குறிப்பாக இப்போட்டியில் 3 சிக்சர்களை பறக்க விட்ட அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து ஆல் டைம் பட்டியலில் கிறிஸ் கெயிலுக்கு பின் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 63
2. ரோகித் சர்மா : 34*
3. யுவராஜ் சிங் : 33
4. ஷேன் வாட்சன் : 31
5. டேவிட் வார்னர் : 31*
அத்துடன் இப்போட்டியில் அரைசதம் அடித்த அவர் 50 ஓவர், 20 ஓவர் உட்பட அனைத்து வகையான ஐசிசி உலக கோப்பைகளிலும் சேர்த்து அதிக முறை 50+ ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி : 25*
2. ரோகித் சர்மா/சச்சின் டெண்டுல்கர் : தலா 23
மேலும் டி20 உலக கோப்பையில் அரை சதமடித்த 2வது இந்திய கேப்டன் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையும் அவர் பெற்றார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 57
2. ரோஹித் சர்மா : 53*
3. எம்எஸ் தோனி : 45



