ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா இதர அணிகளை காட்டிலும் வலுவாக அணியாக திகழ்வதால் எளிதாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை இந்தியா சுவைத்ததால் காலரை தூக்கி விட்ட இந்திய ரசிகர்களுக்கு சூப்பர் 4 சுற்றில் கிடைத்த அடுத்தடுத்த தோல்விகள் தலைகுனிவை ஏற்படுத்தியது. அதனால் இந்தியா பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு 99% பறிபோன நிலைமையில் செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று பாகிஸ்தானிடம் ஆப்கானிஸ்தான் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் அந்த 1% வாய்ப்பும் மொத்தமாக காலியானது.

இதனால் ஆரம்பத்தில் அசால்டாக கோப்பையை வெல்லும் என்று கருதப்பட்ட இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்ப தயாராகியுள்ளது. மேலும் செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை விட அனுபவமும் திறமையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பெற்றிருந்த போதிலும் இப்படி தோல்விகளை சந்தித்து இந்தியா வெளியேறியுள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ரோஹித் சாதனைகள்:
இதனால் இந்த தொடரிலேயே இப்படி வெளியேறிய இந்தியா விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எவ்வாறு வெல்லப் போகிறது என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிலைமைக்கு பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியில் தோற்றாலும் இலங்கைக்கெதிரான வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா போட்டியில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் அப்போட்டியில் ராகுல் 6, விராட் கோலி 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆனாலும் நீண்ட நாட்கள் கழித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் சரவெடியாக 72 (41) ரன்களை 175.61 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார். ஆனால் அவரது போராட்டத்தை வீணடிக்கும் வகையில் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா 17, ரிஷப் பண்ட் 17 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி 180 ரன்களைக் கூட தொடாத நிலைமையை ஏற்படுத்தினர். அதேபோல் பவுலர்களும் பொறுப்பின்றி செயல்பட்டு ரன்களை வாரி வழங்கி வெற்றியையும் தாரை வார்த்தனர்.
1. இருப்பினும் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பி 72 ரன்களை குவித்த ரோஹித் சர்மா ஆசிய கோப்பை வரலாற்றில் 1000 ரன்களைக் குவித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் ஒட்டுமொத்த ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 3வது பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சனாத் ஜெயசூரியா : 1220
2. குமார் சங்ககாரா : 1075
3. ரோஹித் சர்மா : 1016*

2. மேலும் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்து புதிய ஆல்-டைம் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 1016*
2. சச்சின் டெண்டுல்கர் : 971
3. விராட் கோலி : 920
3. அத்துடன் 4 சிக்ஸர்களை விளாசிய அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பாகிஸ்தானின் சாகித் அப்ரிடியின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 29*
2. சாஹித் அப்ரிடி : 26
3. சனாத் ஜெயசூரியா : 23

4. மேலும் ஆசிய கோப்பையில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை (தலா 9) அவர் சமன் செய்துள்ளார். அதுபோக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் உலக சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா/விராட் கோலி : 32
2. பாபர் அசாம் : 27
5. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிக சிக்சர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற மார்ட்டின் கப்தில் சாதனையை முறியடித்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 102*
2. மார்ட்டின் கப்டில் : 101
3. கோலின் முன்றொ : 73



