இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துணித் வெல்லலாகே 67*, நிஷாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 24, வாஷிங்டன் சுந்தர் 5, ஸ்ரேயாஸ் ஐயர் 23, கேஎல் ராகுல் 31, அக்ஸர் பட்டேல் 33 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல கடைசியில் சிவம் துபே அதிரடியாக 25 ரன்கள் எடுத்தாலும் பினிஷிங் செய்யாமல் அவுட்டானார்.
ரோஹித் ஏமாற்றம்:
கடைசியில் ஒரு விக்கெட் கையில் இருந்த நிலையில் வந்த அர்ஷ்தீப் சிங் 1 ரன் தேவைப்பட்ட போது சிங்கிள் எடுக்காமல் அதிரடியாக விளையாட முயற்சித்து வெற்றி நழுவ விட்டார். அதனால் இந்தியாவை 230க்கு ஆல் அவுட்டாக்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் கேப்டன் அசலங்கா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில் அந்த 1 ரன்னை இந்திய அணி எடுத்திருக்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் தர்மா வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங்கில் தங்களுடைய கை மேலோங்கி இருந்தும் தொடர்ச்சியாக வேகமாக ரன்கள் எடுக்காதது தோல்வியை கொடுத்ததாகவும் அவர் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த இலக்கு எட்டக்கூடியது. அதை எட்டுவதற்கு நீங்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். சீரான இடைவெளிகளில் நாங்கள் நன்றாகவே பேட்டிங் செய்தோம். இருப்பினும் தொடர்ச்சியான வேகம் இல்லை. எங்கள் கை மேலோங்கி இருந்த போது சில விக்கெட்டுகளை இழந்தோம். ராகுல் – அக்சர் பார்ட்னர்ஷிப் அமைத்த போது நாங்கள் கம்பேக் கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது”
இதையும் படிங்க: 75/0 டூ 230 ரன்ஸ்.. போராடிய துபே, சொதப்பிய அர்ஷ்தீப்.. அடங்க மறுத்த இலங்கை.. இந்தியா சொதப்பியது எப்படி?
“இது போன்ற விஷயங்கள் நடக்கும். இலங்கையும் நன்றாக விளையாடினார்கள். இருப்பினும் கடைசியில் நியாயமான முடிவு கிடைத்தது. பிட்ச் மாறாமல் அப்படியே தான் இருந்தது. ஆனால் அதில் நீங்கள் வந்ததும் அதிரடியாக விளையாட முடியாது. நீங்கள் கொஞ்சம் நின்று விளையாட வேண்டும். பல்வேறு நேரங்களில் இப்போட்டி இரு அணிகளின் பக்கமும் சென்றது. நாங்கள் அந்த ஒரு ரன்னை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.



