
இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரை இந்தியா ஒய்ட்வாஷ் செய்து வென்றது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுடன் இந்தியா முழு பலத்துடன் களமிறங்குகிறது.
அதனால் டி20 தொடரில் சொதப்பிய இலங்கையை ஒருநாள் தொடரிலும் இந்தியா வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா முதல் முறையாக இந்தத் தொடரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து செயல்பட உள்ளார். இந்நிலையில் கௌதம் கம்பீர் ஏன் அதிகம் சிரிப்பதில்லை என்று ரோஹித் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
புதிய திட்டங்கள்:
அதற்கு தம்முடன் விளையாடிய காலத்திலும் சரி இப்போதும் சரி அணிக்குள் கௌதம் கம்பீர் நிறைய நகைச்சுவைகளை சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பார் என்று ரோஹித் கூறினார். அத்துடன் அவருடன் இணைந்து இந்திய அணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க உள்ளதாகவும் ரோகித் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கௌதம் கம்பீர் கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளார். இதற்கு முன் அவர் ஐபிஎல் தொடரிலும் ஈடுபட்டுள்ளார். கண்டிப்பாக முந்தைய பயிற்சியாளர்களை விட அவர் வித்தியாசமாக இருப்பார். ராகுல் டிராவிட் வருவதற்கு முன்பாக ரவி சாஸ்திரி இருந்தார். ஒவ்வொரு தனி நபரும் வித்தியாசமாக வேலை செய்வார்கள். கௌதம் கம்பீர் பற்றி எனக்கு நீண்ட காலம் தெரியும். அவருடன் நானும் கொஞ்சம் விளையாடியுள்ளேன்”
“தெளிவான மனதை கொண்ட அவருக்கு அணியிடமிருந்து என்ன வேண்டும் என்பது தெரியும். எங்களுடைய விவாதங்கள் அணிக்கு என்ன தேவை, நாங்கள் என்ன நன்றாக செய்தோம், எதை சமாளிக்க வேண்டும் என்பதைப் பற்றி இருக்கும். நாங்கள் அணியை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்லலாம் என்பதை பற்றி அதிகம் விவாதிப்போம். அதே சமயம் நாங்கள் நீண்ட தூரத்திற்கு திட்டமிடுவதில்லை”
இதையும் படிங்க: அது முடிஞ்ச கதை.. இலங்கையை சாதாரணமா எடுத்துக்காம அதுக்கு தயாராகுங்க.. இந்திய அணிக்கு ரோஹித் அறிவுரை
“இங்கே நாங்கள் 3 போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே அதற்கு தகுந்த ஐடியாக்களை எடுத்துக் கொண்டு எப்படி விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அணிக்குள் கௌதம் பாய் நிறைய நகைச்சுவையை உடைத்து கலகலப்பாக இருப்பார். எனவே ஒரு தனி நபர் சிரிக்கிறாரா இல்லையா என்ற விஷயத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் தனி வழி இருக்கும்” என்று கூறினார்.