
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. இந்த விடயம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதனை தொடர்ந்து இந்த தொடரின் லீக் சுற்றில் எஞ்சியுள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மார்ச் 2-ஆம் தேதி விளையாட இருக்கிறது. கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி எவ்வித சலனமும் இன்றி வெகு எளிதாக பாகிஸ்தான அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணியையும் எளிதாக வீழ்த்தி லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி கடும் சவாலாக இருக்கும் என்பதனால் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி மேற்கொண்டு வரும் இந்த பயிற்சியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்று வரும் பயிற்சியில் இந்திய வீரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வரும் வேளையில் ரோகித் சர்மா மட்டும் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் பேட்டிங் பயிற்சியினை மேற்கொள்ளவில்லை என்றாலும் சிறிய அளவில் ஜாகிங் போன்ற செயல்பாடுகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்த தொடரானது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் வேளையில் ஒருவேளை ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை தரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை முறியடித்த ஜோப்ரா ஆர்ச்சர் – விவரம் இதோ
ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பாகிஸ்தான் அணிக்கெதிரான கடந்த போட்டியில் அசவுகரியத்தை சாதித்திருந்த வேளையில் தற்போது ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக பயிற்சியை தவிர்த்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.